மு.க.ஸ்டாலின் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, அக்கட்சியிலிருந்து செயல்தலைவர் என்ற பதவி நீக்கப்பட்டது.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக பொதுக்குழு கூட்டத்தில், கட்சியின் தலைவர் மற்றும் பொருளாளர் பதவிகளுக்கான தேர்தல் முடிவுகளை பொதுச் செயலாளர் க.அன்பழகன் அறிவித்தார். தலைவர் பதவிக்கு மு.க.ஸ்டாலினைத் தவிர வேறு யாரும் போட்டியிடாததால், அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்படுவதாக அன்பழகன் அறிவித்தார். ஸ்டாலின் தலைவராக வேண்டுமென, 1,307 பேர் வேட்புமனுவை முன்மொழிந்து, வழிமொழிந்ததாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினின் செயல்பாடுகளையும், வளர்ச்சியையும் பொதுச் செயலாளர் அன்பழகன் பட்டியலிட்டார்.
திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, கூட்டத்தில் இருந்தவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேடைக்குச் சென்ற மு.க.ஸ்டாலின், அங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அண்ணா, கருணாநிதி ஆகியோரின் திருவுருவப் படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனிடமும் வாழ்த்து பெற்றார். பதிலுக்கு அன்பழகன் பொன்னாடை போர்த்தி ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஸ்டாலின் திமுக தலைவராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து, அவர் வகித்து வந்த செயல் தலைவர் பதவி கட்சி விதி பிரிவு 4 நீக்கப்பட்டதாக க.அன்பழகன் அறிவித்தார்.