போக்குவரத்து துறையில் வாரிசுதாரர்களுக்கு காலியாக உள்ள கருணை அடிப்படையிலான பணியிடம் அனைத்தும், பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு நிரப்பப்படும் என அமைச்சர் ராஜகண்ணப்பன் உறுதியளித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே உள்ள திணைக்குளம் கிராமத்தில் 26 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட சமுதாய கூடத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து பரமக்குடியில் இருந்து கோயமுத்தூர், ஆர்.எஸ்.மங்கலம், பொட்டகவயல், ஆனந்தூர், தொண்டி, சாயல்குடி, ஆக்கன் வயல் உள்ளிட்ட 12 புதிய வழித்தடங்களில் அரசு பேருந்து சேவையை பச்சைக்கொடி அசைத்து அமைச்சர் துவங்கி வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
பின்னர் அதனைத்தொடர்ந்து 1.66 கோடி மதிப்பீட்டில் சத்தியமூர்த்தி காலனி அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள மோட்டார் வாகன அலுவலக கட்டடத்தை திறந்து வைத்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
அதன் பின் செய்தியாளர்களை சந்தித்தபோது, “தமிழகத்தின் நிறுத்தப்பட்ட பேருந்துகள் அனைத்தும் தற்போது இயக்கப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து கன்னியாகுமரி வரையிலும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து அதிகமாக பேருந்துகள் இயக்கப்படும். அதிமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட 2000 பேருந்துகள் அனைத்தும் இயக்கப்படும். தற்போது 16,650 பேருந்துகள் இயங்கிக் கொண்டிருக்கிறது.
முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோடநாடு விவகாரத்தில் அரசின் மீது நிறைய கருத்துகளை தெரிவித்து வருகிறார். தவறு யார் செய்தாலும் தண்டனை நிச்சயம் என்பதே உண்மை. இப்போதுள்ள சூழலில், கடன் வாங்காமல் அரசை நடத்த முடியாத அளவுக்கு சூழலுள்ளது. எனிலும், சரியான முறையில் வட்டி கட்டி அதிக அளவில் கடன் பெறாமல் இருந்தால் ஓரளவு சுமூகமாக செல்லும். ரூ.2.45 லட்சம் கோடி கடனை, ரூ. 5 லட்சம் கோடி ரூபாய் ஆக அதிகரித்துள்ளதால் அரசுக்கு கஷ்டம் வந்துள்ளது.
போக்குவரத்து துறையில் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை தயாராகிக்கொண்டிருக்கிறது. எஸ்.சி.டி.சி யில் 1,800 காலிப்பணியிடங்கள் உள்ளது. நடத்துநர், ஓட்டுநர் பற்றாக்குறையும் உள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் முடிந்த பிறகு முதல்வரிடம் பரிசீலித்து வாரிசுகளுக்கு வேலை வழங்கப்படும்” என்றார்.