திருச்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு கூட்டமைப்பின் கண்காட்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி பேசியபோது...
"நான் யாருக்கு பரிசு கொடுக்க விரும்பினாலும் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தயாரித்த பொருட்களை தான் பரிசாக வழங்குகிறேன். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் தற்போது கடன் உதவி பெரும் நிலையிலிருந்து பொருளாதாரத்தை உருவாக்குபவர்கள் என்கிற நிலையை அடைந்துள்ளனர். தமிழ்நாட்டில் மகளிர் சுயஉதவிக் குழுக்கள் அமைதியாக தொழில் புரட்சியை செய்து வருகிறது.
மூன்றாம் பாலினத்தவருக்கு தனி சுயஉதவிக் குழுக்கள் தொடங்க முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும். தமிழ்நாட்டில் முதல் முறையாக திருச்சியில் உற்பத்தியாளர் சந்தையாளர் ஒருங்கிணைப்பு திட்டம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்" என்றார்.
இந்நிகழ்வில், "பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மகேஷ், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில் குமார், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் முதன்மை செயல் அலுவலர் திவ்யதர்ஷினி, திட்ட முதன்மை செயலாக்க அலுவலர் பத்மஜா, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.