ஆத்தூரில் மகளிர் சுய உதவிக்குழு பணத்தை வங்கியில் செலுத்த எடுத்து வந்தபோது கவனத்தை திசைத்திருப்பி 1 லட்சத்து 20 ஆயிரத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் நகராட்சிக்குட்பட்ட சாத்தனார் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவருடைய மனைவி மங்கையர்க்கரசி ’புன்னகை’ என்ற மகளிர் குழுவை நடத்தி வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த செல்வி என்பவர் பிரதிநிதியாக இருந்து வருகிறார். இந்நிலையில் ஆத்தூர் காமராஜர் சாலையில் உள்ள பாரத் ஸ்டேட் வங்கியில் இருந்து மகளிர் குழுவின் பணம் ஒரு லட்சத்து 20 ஆயிரம் ரூபாயை மங்கையர்க்கரசி எடுத்துக்கொண்டு தனது இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். மகளிர் காவல் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோது மர்ம நபர்கள் மங்கையர்க்கரசியின் முதுகில் ரசாயன பவுடர் போன்றவற்றை தடவியதாகக் கூறப்படுகிறது.
இதனால் அவருக்கு அரிப்பு ஏற்படவே வண்டியை நிறுத்துவிட்டு அருகிலிருந்த தேநீர் கடையில் தண்ணீர் வாங்கி சுத்தம் செய்ய முயன்றபோது பணம் வைத்திருந்த பையை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றிருக்கின்றனர். இதுகுறித்து மங்கையர்க்கரசி ஆத்தூர் நகர காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். பட்டப்பகலில் முக்கிய சாலையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.