ஆண்களுக்கு இணையாக பெண்களும் தங்கள் உரிமைகளைக் கேட்டு போராடியதை குறிப்பிட சர்வதேச மகளிர் தினம் ஆண்டுதோறும் மார்ச் மாதம் 8-ம் தேதி உலக அளவில் கொண்டாடப்படுகிறது. இனம், மொழி, கலாசாரம், பொருளாதாரம், அரசியல் வேறுபாடுகளை மறந்து இந்த நாளை போற்றி வருகிறார்கள். ஆனால், ஆண்களுக்கு நிகராக பணிக்குச் சென்றாலும் மகளிருக்கு சமஉரிமை, ஊதியம் அளிக்கப்படுகிறதா என்பது இன்றுவரை கேள்விக் குறிதான்.
சமஉரிமை, வேலை நேரம், சம்பளம், தொழில் வாய்ப்பில் பாரபட்சமின்மை. இவைகளில் தொடங்கி சமையலறை வரை அனைத்தையும் உள்ளடக்கியதுதான் பெண் உரிமை. தன் வீட்டில் இருக்கும் பெண்களை வேலைக்கு அனுப்பும் ஆண்கள், தங்களுக்கு நிகராக, திறமையாக பணியாற்றும் பெண்ணுக்கு சமஉரிமை தருகிறார்களா என்றால் இல்லை என்கிறது ஆய்வு.
ஊதியத்திலும் பெண்களுக்கு சமஉரிமை கிடைக்கிறதா என்றால் சராசரியாக 19 சதவிகிதம் குறைவான ஊதியமே கிடைப்பதாக ஆய்வு ஒன்றில் கூறப்பட்டுள்ளது. மான்ஸ்டர் இந்தியா நடத்திய ஆய்வில் இந்தியாவில் ஒரு மணி நேரத்துக்கு ஆண்களின் சராசரி ஊதியம் 242 ரூபாய் 49 காசுகள் இருப்பதாகவும் பெண்களுக்கு 196 ரூபாய் 30 காசு ஊதியம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் ஆண்களை விட பெண்கள் சராசரியாக 46 ரூபாய் 19 காசு சம்பளம் குறைவாக பெறுகின்றனர் என தெரியவந்துள்ளது.
இயல்பாகவே சேவை மனப்பான்மை அதிகமுள்ள பெண்களை பின்தள்ளி சேவைத் துறையிலும் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். சமூக சேவை, சுகாதாரச் சேவை உள்ளிட்ட துறைகளிலும் பெண்களை விட 21 சதவிகிதம் கூடுதலாக ஆண்களே ஊதியம் பெறுவதாக மான்ஸ்டர் இந்தியா தகவல் தெரிவித்துள்ளது. ஆன்லைன் மூலம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில் பணியில் பாகுபாடு காட்டப்படுவதாக 60 சதவிகித பெண்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.திருமணமான பின்னரே இந்தப் பாகுபாடு எழுவதாக பெண்கள் வெளிபடுத்தியுள்ளனர். மகப்பேறு விடுப்பு முடிந்து பணிக்குத் திரும்பும்போது 46 சதவிகித பெண்கள் வேலையை விட்டுவிடலாம் என்ற உணர்வு ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். அலுவலக பணி நேரம் முடிந்த பின்னும் பணியாற்றும் ஆண்களைப் போல் தங்களால் முடியவில்லை என்பதை நம்புவதாக 46 சதவிகித பெண்கள் மான்ஸ்டர் இந்தியா நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளனர்.
ஆண்களுக்கு நிகராக பெண்கள் அனைத்து துறைகளிலும் பணியாற்றுகின்றனர் என்ற கூற்று இருந்தாலும், பணியில் அவர்களுக்கு கிடைக்கும் உரிமை இன்றளவும் குறைவு என்பதே மான்ஸ்டர் இந்தியா நடத்திய ஆய்வில் தெரிகிறது.