மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாகக்கூறி பெண்ணொருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி அக்கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு, தனது மகனையும் அவர்கள் அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காததால் மன உளைச்சல் அடைந்ததாக கூறும் வளர்மதி, இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்று மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியில் இருந்த போலீசார் மற்றும் தீயணைப்பு மீட்பு படையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட பெண் வலியுறுத்தி உள்ளனர். இதுகுறித்து ஆர்.எஸ். மங்கலம் வட்டாட்சியர் சேகரை நாம் தொடர்பு கொண்டு கேட்டபோது, இது சம்பந்தமான புகார்கள் இதுவரைக்கும் வரவில்லை என்றும், தற்போது வந்துள்ளதால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.