விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியின் 50வது ஆண்டு பொன்விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
அப்போது அங்கு உரையாற்றிய அவர், இந்த கல்லூரி 50 ஆவது ஆண்டு பொன் விழாவை கொண்டாடும் நேரத்தில், கடந்து வந்த ஆண்டுகளில் நமது நாடு பலதரப்பட்ட முகங்களைக் கொண்ட சமூகமாக மாறியுள்ளது. இந்த மாற்றங்கள் நிறைந்த சமூகத்தில் விவசாயம் மட்டும் தனியாக இருந்து நாட்டுடைய முன்னேற்றத்திற்கு உதவ முடியாது. வளர்ந்து வரும் நாகரிகத்திற்கும் தொழில்நுட்பத்திற்கும் ஏற்ப தகவல் தொழில்நுட்பத் துறை நாட்டின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றுகிறது.
நல்ல வேளையாக இந்த துறையில் நமது நாடு பல முன்னேற்றங்களை கண்டுள்ளது. புதிதாக செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி பல குறிப்பிடத்தக்க சாதனைகளை இந்தியா செய்துள்ளது. அதன் மூலமாக உலகில் அதிகமான நவீன தொழில்நுட்பங்களை கொண்ட நாடாக இந்தியா திகழ்கிறது.
கடந்த பத்து வருடங்களுக்கு முன்பு வரை செல்போன் டேட்டா உற்பத்தியில் இரண்டு சதவிகிதமாக இருந்த இந்தியா தற்சமயம் 24 சதவீதத்தை எட்டியுள்ளது. பொருளாதார பிரச்னைகளையும் நாடு சந்தித்து வருகிறது. பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது.
பல நாடுகள் பொருளாதாரத்தில் முன்னேற்ற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியா கொரோனா பெருந்தொற்று காலத்தில் சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்டெடுத்து தற்போது உலகமே திரும்பிப் பார்க்கும் அளவுக்கு வளர்ந்து வருகிறது.
இதன் மூலமாக அறிவியல் தொழில்நுட்பத்திலும் நமது நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. புதிதாக தொழில் தொடங்குவது மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதில் நமது நாடு மூன்றாம் இடத்தில் உள்ளது.
சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காத வகையில் தொழில்கள் தொடங்குவதில் நமது நாடு முன்னோடியாக உள்ளது. அனைத்துக்கும் இளைஞர்கள் சக்தி மிக அவசியம். இளைஞர்கள் அறிவும் கல்வியும் நாட்டுக்கு ஒரு மாயாஜால வளர்ச்சியை கொண்டு வருகிறது. மத்திய அரசு அனைத்து துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது. வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்குதல், சாலை வசதி, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கட்டட வசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி வருகிறது.
வளர்ச்சி ஒரு பக்கம் இருந்தாலும் அதற்கு சமமாக மக்கள் தொகை பெருக்கமும் அதிகரித்து வருகிறது. பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் நமது நாடு பலதரப்பட்ட விஷயங்களின் அடிப்படையில் மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. இந்தியா எந்த ராஜாவாலும் எந்த மகாராஜாவாலும் உருவாக்கப்பட்டது அல்ல. ரிஷிகளாலும் வேதங்களாலும் இந்தியா உருவாக்கப்பட்டது. அதன் மூலம் கிடைத்த அறிவுஒளி தான் மக்களை வழி நடத்துகிறது. இதனால் தான் இந்திய மக்கள் மிளிர்கின்றனர்.
இது இந்தியாவுக்கு மட்டுமின்றி தமிழ்நாட்டுக்கும் பொருந்தும். ஏனெனில் தமிழ்நாட்டிலும் கூட நாயன்மார்கள், ஆழ்வார்கள், சங்கம் வளர்த்தவர்கள் உள்ளிட்ட ஆன்மிக தொண்டாற்றியவர்களின் வரலாறு ஆழமாக உள்ளது. இதுதான் பாரதம், இந்த அறிவுஒளி தான் மற்ற நாடுகளுக்கு நம்மை பற்றிய வெளித் தோற்றத்தை கொடுக்கிறது. 1956 ஆம் ஆண்டுக்கு முன்னதாக புலம் பெயர்ந்தவர்கள் என்ற வார்த்தையே கிடையாது. ஒரே நாடு ஒரே சமூகம் என மக்களோடு மக்களாக வசித்து வந்தனர்.
நமது நாடு தற்போது மாசு பிரச்னையை எதிர்கொண்டு வருகிறது. இந்த பெரிய பிரச்னையை சமாளிப்பதற்காக கார்பன் ஃப்ரீ திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. தற்சமயம் இந்தியாவில் கார்பன் ஃப்ரீ வாகன பயன்பாடு 20 சதவிகிதமாக உள்ளது. இது மட்டுமின்றி உலக அளவில் பொருளாதாரத்தில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. உலக மக்களின் நன்மைக்காக இந்தியா பல்வேறு ஆக்கப்பூர்வமான விஷயங்களை செய்து வருகிறது. எடுத்துக்காட்டாக கொரோனா பெருந்துற்று காலத்தில் தடுப்பூசியை கண்டுபிடித்து 153 நாடுகளுக்கு இலவசமாக அனுப்பி வைத்தது.
இதன்மூலம் கணியன் பூங்குன்றனாரின் யாதும் ஊரே யாவரும் கேளிர் கொள்கையில் நமது நாடு செயல்பட்டு வருவதை உலகமே வியந்து பார்த்து வருகிறது. ஜி-20 மாநாட்டை தலைமை தாங்கி நடத்தும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இந்தியா இந்த வாய்ப்பை பெற்றதற்கான நோக்கம் ஒரு பூமி ஒரே குடும்பம் ஒரே எதிர்காலம் என்ற செயல்பாடு தான். நமது நாட்டில் பெண்களின் சக்தி ஆகப்பெரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறது. ஆயிரம் ஆண்களுக்கு 956 பெண்கள் என்ற நிலை மாறி இன்று ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கின்றனர் என்ற நிலை உருவாகியுள்ளது.
இதற்கு காரணம் மத்திய அரசின் பெண் குழந்தைகள் மீதான அக்கறை கொண்ட திட்டங்கள். இது போன்ற திட்டங்களை ஊக்கப்படுத்துவதால், இன்றைக்கு ராணுவத்தில் போர் விமானங்களை இயக்குவதிலும் பெண்கள் சாதனை புரிந்து வருகின்றனர் என்றார்.