திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் ஒருமாத கைக் குழந்தையுடன் மது போதையில் தள்ளாடித் திரிந்த பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது. குழந்தையை மீட்ட போலீசார், குழந்தையை உடனடியாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
திண்டுக்கல் மாநகர் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை கையில் வைத்தபடி மது அருந்திக் கொண்டிருந்துள்ளார். இதைபார்த்த அந்தப் பகுதியில் இருந்த இளைஞர்கள் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு அறையில் தகவல் அளித்துள்ளனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலர் ஒருவர் அந்தப் பெண்ணிடம் விசாரித்துள்ளார். அப்போது, குழந்தை பிறந்து 13 நாள் ஆகிறது என்றும் கரூரில் குழந்தை பிறந்தது என முன்னுக்குப் பின் முரணாக பேசியுள்ளார். இதனால் சந்தேகமடைந்து காவலர் உடனடியாக பெண் காவலருக்கு தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து அங்கு விரைந்து வந்த பெண் காவலர் அந்தப் பெண்ணின் கையில் இருந்து குழந்தையை மீட்டனர். பெண் காவலர் குழந்தையை பார்த்தபோது குழந்தை மயக்கத்தில் இருந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து குழந்தையை திண்டுக்கல் அரசு மருத்துவமனை அனுமதித்து முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். அந்தக் குழந்தை யாருடைய குழந்தை, கடத்தப்பட்ட குழந்தையா என பல கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.