கண்ணீர் அஞ்சலிக்காக வைத்த பேனர் விழுந்து மூதாட்டி ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துவீரப்பன். இவரது மகன் ரவிச்சந்திரன். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரவியின் தந்தை இறந்த நிலையில், திருவோணம் அருகே உள்ள மேல மேட்டுப்பட்டி நெடுஞ்சாலையில் தந்தையின் பட திறப்பு விழாவிற்கு பேனர் வைத்துள்ளார்.
இந்த நிலையில் அந்த வழியாக வந்த புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அம்மணி பட்டு கிராமத்தைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மனைவி விஜயராணி என்பவர் தனது சகோதரர் வீட்டிற்கு சென்றுவிட்டு, வரும் பொழுது அந்த வழியாக வந்த ஒருவரிடம் லிப்ட் கேட்டு வந்துகொண்டிருந்தார். மேட்டுப்பட்டி அருகே வந்த போது ரவிச்சந்திரன் வைத்திருந்த பேனர் விஜயராணி மீது சரிந்து விழுந்தது. இதில் பலத்த காயமடைந்த விஜயராணியை அந்தப்பகுதி வழியாக சென்றவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து திருவோணம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் பேனரை கைப்பற்றி அதனை வைத்த ரவிச்சந்திரன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். இதனிடையே பலத்த காயமடைந்த விஜயராணி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிர் இழந்தார்.
சென்னை உயர்நீதிமன்றம் சாலை ஓரங்களில் பொதுமக்களில் இடர்பாடுகள் உள்ள இடங்களில் பேனர் வைக்கக்கூடாது என உத்தரவிட்டும் சரியான விதிமுறைகளை கடைபிடிக்க உள்ளாட்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் காவல்துறை வருவாய்த் துறையின் அலட்சியப் போக்கை இதுபோன்ற விபத்துக்கு காரணம் என அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.