அரியலூரில் பூப்பறிக்கச் சென்றபோது 90 அடி ஆழமுள்ள கிணற்றில் பெண் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டம் கோக்குடி கிராமத்தைச் சேர்ந்த லாரன்ஸ் என்பவருடைய மகள் ஹெல்வினா சைனி (18). இவர், நேற்று (11 ஆம் தேதி) மதியம் அவர்களின் கொல்லையில் பூப்பறிக்கச் சென்றுள்ளார். இதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், லாரன்ஸ் கொல்லையில் சென்று பார்த்த போது கிணற்றில் செப்பல் மற்றும் துப்பட்டா கிடந்துள்ளது. மழை பெய்ததால் மகள் கிணற்றில் வழுக்கி விழுந்திருக்கலாம் என நினைத்த அவர், கீழப்பழுவூர் போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
தகவல் அறிந்து அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் பார்த்த போது கிணறு 90 அடிக்கு மேல் ஆழம் இருக்கும் என தெரியவந்தது இதனால் தீயணைப்புத் துறையினர் சடலம் இருக்கிறதா என்பதை அறிய முடியவில்லை.
இதைத் தொடர்ந்து இன்று, மணப்பாறையில் இருந்து நீருக்குள் மூழ்கும் கேமரா வரவழைக்கப்பட்டு சோதனை செய்ததில் கிணற்றில் பிரேதம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து 32 மணி நேரம் கடந்து இளம் பெண்ணின் சடலத்தை மீட்டனர்.
இந்நிலையில், பெண் கிணற்றில் விழுந்து இறந்துள்ளது குறித்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்னர்.
மற்றொரு கோணத்தில் விசாரணை:
கிணற்றி விழுந்ததாக கூறப்படும் பெண் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சர்ச்சை ஒன்று எழுந்தது. அதாவது அந்த பெண் 6 மாத கர்ப்பமாக இருந்ததாகவும் அதற்கு காரணமாக இருந்த அதே ஊரைச் சேர்ந்தவர் போக்சோவில் கைது செய்யப்பட்டதாகவும் தெரிகிறது. பின்னர் பெற்றோர் அவரது கர்ப்பத்தை கலைத்துள்ளனர். போக்சோவில் கைதான அவர் ஜாமீனில் வெளியே வந்துள்ள நிலையில், இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.