ஈரோடு: இருசக்கர வாகனத்தில் மகனை பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்க்கு நேர்ந்த பரிதாபம்
செய்தியாளர்: ரா.மணிகண்டன்
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாரதி நகரில் அமரேஸ் என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது மனைவி ராணி தனது ஐந்து வயது மகன் அபினவை பள்ளியில் விடுவதற்காக இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது மொடக்குறிச்சி யூனியன் அலுவலகம் அருகே சென்றபோது, வெள்ளக்கோவிலில் இருந்து ஈரோடு நோக்கி வந்த அரசுப் பேருந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.
இதில் தாய் ராணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், மகன் அபினவ் காயத்துடன் உயிர் தப்பினார். தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு வந்த மொடக்குறிச்சி காவல் நிலைய போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து வழக்குப் பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.