காதலித்து திருமணம் செய்துகொண்டு மூன்று மாதங்கள் சேர்ந்து வாழ்ந்தநிலையில் தன்னை ஏமாற்றி சென்றதாகவும், தன்னுடைய காதல் கணவரை தன்னுடன் மீண்டும் சேர்த்து வைக்க வேண்டுமென்றும் திண்டுக்கல் மாவட்டத்தில் கௌசல்யா என்ற பெண், குடும்பத்துடன் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் விராலிபட்டி கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகள் கௌசல்யா, ஒட்டன்சத்திரம் கண்ணனுரை பகுதியைச் சேர்ந்த மகுடீஸ்வரன் என்பவரை திண்டுக்கல் ஐடிஐயில் படிக்கும் போது காதலித்து வந்துள்ளார். இருவரும் ஒருவரை ஒருவர் காதல் செய்துவந்த நிலையில், சென்னையில் ஒன்றாக வேலைக்கு சேர்ந்து, சென்னையிலேயே திருமணமும் செய்துள்ளனர். சென்னையில் மூன்று மாதம் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். அதன்பின்னர் இருவரும் சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
அப்போது கௌசல்யா கர்ப்பமானதை அறிந்த மகுடேஷ்வரன், பரிசோதனைக்காக அழைத்துச் செல்வதாக கூறி கௌசல்யா அனுமதி இல்லாமல் மயக்க ஊசி செலுத்தி அவருக்கு கருக்கலைப்பு செய்ததாக கூறப்படுகிறது. அதன்பின் மகுடீஸ்வரன் கௌசல்யாவை பிரிந்தும் சென்றிருக்கிறார்.
இதனால் கௌசல்யா மகுடேஷ்வரனின் வீட்டுக்குச் சென்று நியாயம் கேட்டிருக்கிறார். அங்கு அவரது உறவினர்கள், கௌசல்யாவிடம் “உங்கள் சாதிக்கும் எங்கள் சாதிக்கும் ஒத்து வராது” என்று கூறி அவரை திருப்பி அனுப்பி வைத்துள்ளனர். இது சம்பந்தமாக ஒட்டன்சத்திரம் மகளிர் காவல் நிலையத்தில் கெளசல்யா புகார் கொடுத்துள்ளார். புகாரில், தன்னை தன் கணவருடன் சேர்த்து வைக்குமாறு குறிப்பிட்டிருந்திருக்கிறார் கௌசல்யா. ஆனால் அவருக்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறுகிறார். இதனால் அடுத்தகட்டமாக கெளசல்யா மற்றும் அவரது தந்தை - தாய் மூவரும், புகார் மீது நடவடிக்கை எடுக்காத ஆய்வாளரை கண்டித்தும் - மகுடேஷ்வரன் கௌசல்யாவை சேர்த்து வைக்க கோரியும் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்பின் கௌசல்யா எஸ்பி சீனிவாசனிடம் மனுவை நேரடியாக அளித்துள்ளார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட எஸ்பி இந்த புகார் மீது விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.