கோவை மணியகாரம்பாளையம் நட்சத்திரா கார்டன் பகுதியில் வசிப்பவர் சரண்யா. தஞ்சாவூரைச் சேர்ந்த இவர், தனது கணவர் கோபிநாத் மற்றும் குழந்தைகளுடன் இங்கு வசித்து வருகிறார். இவரது வீட்டின் அருகில் கோவை மாநகர மேயர் கல்பனாவின் சகோதரர் குமார், அவரது தாயார் காளியம்மாளுடன் வசித்து வருகிறார். இதே வீட்டில்தான் கடந்த இரு மாதங்களாக கோவை மாநகர மேயர் கல்பனாவும், தன் கணவருடன் தங்கியுள்ளார். மொத்தம் இங்குள்ள 4 வீடுகளில் 3-ல் கல்பனாவும் அவரது குடும்பத்தினரும் உள்ளனர். ஒரு வீட்டில் தாங்கள் இருக்கும் நிலையில்தான் தங்களைக் காலிசெய்ய வைக்க தொடர்ச்சியாக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வருவதாக மேயர் கல்பனா குடும்பத்தினர் மீது சரண்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேயர் ஆவதற்கு முன்பு நன்றாக பழகிய கல்பனா குடும்பத்தினர், பணம் கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட பிரச்னைக்குப் பிறகு மோசமாக நடந்துகொள்வதாக சரண்யா குற்றஞ்சாட்டியுள்ளார். இதற்காக கல்பனா குடும்பத்தினர், தங்களுடைய காரைக்கூட எடுக்க முடியாத அளவுக்கு கேட்டைப் பூட்டிவிடுவதாகவும், தங்கள் வீட்டின் சமையல் அறையின் அருகே கெட்டுப்போன உணவுகளைக் கொட்டுவதாகவும், அந்த சுவர் அருகே வாளியில் பிடித்துவந்து சிறுநீரை ஊற்றுவதாகவும் சரண்யா குற்றஞ்சாட்டியுள்ளார்.
இதற்கான ஆதாரமாய் சிசிடிவி கேமராவில் வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், அவர்கள் வீசிய குப்பைகளால் தங்கள் குடும்பத்தினருக்கு சுவாசக் கோளாறு நோய் ஏற்படுதாகவும் அவற்றுக்கான மருத்துவப் பரிசோதனைகளைச் செய்திருப்பதாகவும் சரண்யா வேதனையுடன் குறிப்பிடுகிறார்.
தஞ்சாவூரில் பாரம்பரிய திமுக குடும்பத்தைச் சேர்ந்த தங்கள், அக்கட்சியைச் சேர்ந்தவர்களாலேயே கடும் துன்பத்திற்கும் மன உளைச்சலுக்கும் ஆளாகி வருவதாகவும், இதுதொடர்பாக தஞ்சாவூரில் அமைச்சர் ராஜாவின் கவனத்திற்கு கொண்டு சென்று இருப்பதாகவும் சரண்யா தெரிவித்துள்ளார்.
திமுக தலைமை இந்த விவகாரத்தில் தலையிட்டு தங்களுக்கு உரிய நியாயம் கிடைக்க நடவடிக்கை எடுக்கும் என்ற நம்பிக்கையாலேயே காவல் நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை என்று சரண்யா தெரிவித்துள்ளார். அதேநேரத்தில், இந்த விஷயம் தொடர்பாக கல்பனா தரப்பில், “தாம் மன உளைச்சலில் இருப்பதாகவும் இப்போது யாரிடமும் பேச விருப்பம் இல்லை” எனவும் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.