“என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்” - கணவர் வீட்டின் முன்பு அழுது புரண்ட பெண் வக்கீல்

“என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்” - கணவர் வீட்டின் முன்பு அழுது புரண்ட பெண் வக்கீல்
“என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள்” - கணவர் வீட்டின் முன்பு அழுது புரண்ட பெண் வக்கீல்
Published on

கணவர் வீட்டிற்குள் சேர்த்துக்கொள்ளாததால் கொட்டும் மழையிலும் வீட்டின்முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார் கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண் வழக்கறிஞர் பிரியதர்ஷினி.

கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையை அடுத்த திருத்துவபுரத்தை சேர்ந்தவர் மொழிப்போர் தியாகி ஜேம்ஸ். இவரது மகள் வக்கீல் பிரியதர்ஷினி (28). இவருக்கும் முளகுமூடு பகுதியைச் சேர்ந்த நாகர்கோவில் கோணம் அரசு பொறியியல் கல்லூரியில் உதவிப் பேராசிரியராக பணிபுரிந்துவரும் ராஜ ஷெரின் இருவருக்கும் 09.01.2020 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது நகை, பணம் மற்றும் 2 கோடி மதிப்பிலான சொத்தும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. வக்கீல் பிரியதர்ஷினி திருமணமான முதலில் சந்தோஷமாக கணவருடன் வாழ்ந்துவந்த நிலையில் கணவரும், அவரது வீட்டாரான மாமனார் எலியாஸ், மற்றும் மாமியார் பேபி சரோஜா ஆகியோர் தொடர்ந்து கூடுதல் பணமும் நகையும் வேண்டும் என்றும், வீட்டில் சென்று வாங்கி வரச்சொல்லியும் கொடுமை செய்து வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து பிரியதர்ஷினி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் செய்திருக்கிறார். அந்தப் புகாரின் பேரில் கோர்ட் ஆலோசனைப்படி போலீசார் இருவரையும் தனியாக வீடு எடுத்து வாழ அறிவுரை கூறியிருக்கின்றனர். அதன்படி நாகர்கோவில் கோணம் அருகாமையில் தனியாக வீடு எடுத்து பிரியாதர்ஷினியும் அவரது கணவரும் குடியேறினர். இந்நிலையில் நீண்ட நாட்களுக்குப் பிறகு வீட்டிற்கு வந்துவிட்டு சென்ற ராஜ ஷெரின், நேற்று நள்ளிரவில் அவரை தனியாக தவிக்க விட்டுவிட்டு தனது தந்தை வீட்டில் வந்து அமர்ந்துகொண்டார். தனியாக இருந்த பிரியதர்ஷினி உணவு, தண்ணீர் இல்லாமல் தவித்துள்ளார். இந்நிலையில் தனது கணவனை தொலைபேசி மூலமும், நண்பர்கள் மூலமும் தொடர்புகொண்டதோடு பல இடங்களில் தேடியுள்ளார்.

எங்குதேடியும் கணவர் கிடைக்காததால் பிரியதர்ஷினி தனது மாமனார் வீட்டிற்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ராஜ ஷெரின் அங்கு இருப்பதை பார்த்து என்னை ஏன் இவ்வாறு ஏமாற்றுகிறீர்கள் என கேள்வி எழுப்பி உள்ளார். உடனே அவரை வெளியே விட்டு கேட்டை பூட்டிவிட்டனர். இதனால் அதிர்ச்சியடைந்த வக்கீல் பிரியதர்ஷினி ’என்னை வீட்டில் சேர்த்துக்கொள்ளுங்கள், கேட்டை திறந்து விடுங்கள்’ என கதறி அழுதார். ஆனால் அவர்கள் திறப்பதாக இல்லை. இதனால் மனமுடைந்த பிரியதர்ஷினி, கொட்டும் மழையிலும் சாலையில் அமர்ந்து உருண்டு புரண்டு அழுதார். தகவலறிந்த தக்கலை போலீசார் விரைந்துவந்து அவருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் பிரியதர்ஷினி ’எனது கணவர் எனக்கு தேவை அவரை சேர்த்து வையுங்கள்’ எனக்கூறி அழுதுகொண்டே வீட்டின் முன் அழுதுகொண்டு போராட்டம் நடத்தினார். 

இதுகுறித்து வக்கீல் பிரியதர்ஷினி புதிய தலைமுறையிடம் தெரிவிக்கையில், ‘’எனக்கு எனது கணவர் ராஜ ஷெரினுடன் 09.01.2020 அன்று திருமணம் நடந்தது. அப்போது எனது தந்தை 101 பவுன் நகையும் 5 லட்ச ரூபாயும், ரூ.2 கோடி மதிப்பிலான சொத்துக்களும் வரதட்சணையாக கொடுத்தார். அதுவும் போதாதென இன்னும் 101 பவுன் நகை வரதட்சணையாக வேண்டுமென திருமணமானதில் இருந்தே கொடுமை செய்துவருகின்றனர். மேலும் கோர்ட் உத்தரவுப்படி மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையம் கொஞ்சகாலம் தனித்து வாழும்படி அறிவுறுத்தியது. அதன்படி கணவரும் சம்மதித்து நாகர்கோவிலில் தனியாக வீடு எடுத்து குடியேறினோம். அவர் எனக்கு சென்னையில் ஒரு கம்பெனியில் அதிக சம்பளத்தில் வேலை ரெடியாகி உள்ளது என்றும், வேலையில் சேர்ந்தவுடன் உன்னையும் அழைத்துச் செல்கிறேன் என்றும் கூறிவிட்டு ஊரைவிட்டு சென்றுவிட்டார். சென்றவரை தொடர்பு கொள்ள முடியவில்லை.

நான் நாகர்கோவிலில் உள்ள வீட்டில் தனியாக உணவு தண்ணீரின்றி தவித்தேன். பல இடங்களில் அவரை தொடர்பு கொண்டும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. நேற்றிரவு வீட்டிற்கு வந்த அவர் மீண்டும் திரும்பிச்சென்ற நிலையில் அவரது தந்தையின் வீட்டில்தான் இருக்கிறார் என்று தெரிந்த கொண்டு இங்கு வந்தேன். இங்கே என்னை வீட்டை விட்டு வெளியே தள்ளி கேட்டை பூட்டிவிட்டனர். நான் தொடர்ந்து ஜட்ஜ் தேர்வுக்காக படித்துக் கொண்டிருக்கிறேன். என்னை ஜட்ஜ் ஆக விடமாட்டேன் என அவரது வீட்டார் மிரட்டி வருகிறார்கள். எனது கணவர் எனக்கு வேண்டும்; நான் அவருடன் சேர்ந்து வாழ விரும்புகிறேன்’’ என்றார்.

இதுகுறித்து தக்கலை டிஎஸ்பி கணேசன் அவர்களிடம் விளக்கம் கேட்டபோது, அந்த பெண் வக்கீல் அடம்பிடித்து வீட்டு முன்பே அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கணவரையும் அழைத்து பேசமுடியவில்லை என்றும், அவர் தப்பியோடிவிட்டதாகவும் மாலைக்குள் உரிய நடவடிக்கை எடுத்து பெண் வக்கீலுக்கு நியாகம் கிடைக்கும் என்றும் விளக்கமளித்திருக்கிறார்.

பேட்டி:பிரியதர்ஷினி

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com