சென்னை கொரட்டூரில் வசித்து வந்தவர் அமலா ஜான்.(60) அவருக்கு ஜோஷ்வா ஜான்(29) என்ற மகன் இருந்துள்ளார். அமலாவின் கணவர் சென்னை எழும்பூரில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அமலா தனது மகனுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகையையொட்டி அமலா தங்கள் பகுதியில் வசிப்பவர்களிடம் பணம் பெற்று சீட்டுக்கம்பெனி நடத்தியுள்ளார். அவருக்கு ஜோஷ்வா உதவியாக இருந்து வந்துள்ளார். சீட்டுக் கம்பெனியின் மூலம் வசூலித்த பணத்தை ஜோஷ்வா பங்குச்சந்தையில் முதலீடு செய்துள்ளார். சீட்டுக்கம்பெனி மூலம் வாங்கப்பட்ட பணம் வட்டியோடு திருப்பி தரப்படும் என்ற உத்திரவாதம் அளிக்கப்பட்ட நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்த மொத்த பணமும் நஷ்டத்தை சந்தித்துள்ளது.
சீட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திருப்பி கேட்கத்தொடங்கியதால் அமலாவும் அவரது மகனும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்துள்ளனர். முதலில் தாங்கள் ஆசையாக வளர்த்த நாய்க்கு விஷம் கொடுத்து கொன்றுள்ளனர். பின்னர் இருவரும் வீட்டு மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
பொதுவாக அமலா காலையில் எழுந்து நாய்க்கு சாப்பாடு கொடுத்துவிட்டு அக்கம்பக்கத்தினருடன் பேசிச்செல்வார். ஆனால் இரண்டு நாட்களாக வீட்டில் இருந்து அமலா வெளிவரவே இல்லை. இதனால் சந்தேகம் அடைந்த பக்கத்துவீட்டுக்காரர் அமலாவின் வீட்டுக்கு சென்று ஜன்னல் வழியாக பார்த்துள்ளார். அங்கு இருவரின் உடலும் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளது. இதனையடுத்து அவர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அமலா எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர். அதில் ''சீட்டுக்கம்பெனியில் வாங்கிய பணத்தை திருப்பி கொடுக்க முடியாது என்பதால் தற்கொலை செய்துகொள்கிறோம். எங்களிடம் பணம் கொடுத்த 274 பேரிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எங்களது நாயை கவனிக்க யாரும் இல்லை என்பதால் அதற்கும் விஷம் கொடுத்துவிட்டோம்'' என்று குறிப்பிட்டிருந்தது.
பங்குச்சந்தை நஷ்டத்தால் இருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை என்பது எதற்கும் முடிவல்ல. மனித உயிரை மாய்த்துக்கொள்வதற்கான உரிமை யாருக்கும் இல்லை. தற்கொலை எண்ணம் மேலிடும் போது உரிய ஆலோசனை பெற்றால் புதிய வாழ்க்கை அவர்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது. அதற்காகவே சினேஹா போன்ற தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சேவை ஆற்றி வருகின்றன. அவர்களை தொடர்பு கொண்டு இலவசமாக ஆலோசனை பெறலாம்.
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060