மூன்று வேளாண் சட்ட ரத்து மசோதா தாக்கல ;- கலப்பைகள் கார்ப்ரேட்டுக்களை உழுது அகற்றிய திருநாள் என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் புகழாராம் சூட்டியுள்ளார்.
விவசாய விளைபொருள் வியாபாரம் மற்றும் வர்த்தகம், விலை உத்தரவாத ஒப்பந்தம் மற்றும் விவசாய சேவைகள் சட்டம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம் ஆகிய 3 வேளாண் சட்டங்களை மத்தியில் ஆளும் பாஜக அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொண்டு வந்தது.
இந்த சட்டங்கள், விவசாயிகளின் நலன்களுக்காக கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறினாலும் அதை விவசாயிகள் ஏற்கவில்லை. இந்த சட்டங்கள் விவசாயிகளின் நலன்களுக்கு எதிரானவை எனக்கோரி தலைநகர் டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு விவசாயிகள் ஓராண்டு காலமாக போராடி வந்தனர்.
இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக் ஜெயந்தியையொட்டி பிரதமர் மோடி பேசியபோது, 3 வேளாண் சட்டங்களும் ரத்து செய்யப்படும் என அதிரடியாக அறிவித்தார்.
ஆனால் நாடாளுமன்றத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான நடைமுறைகள் நடந்து முடியும் வரையில் போராட்டம் தொடரும் என போராடும் விவசாயிகள் அறிவித்தனர். அத்துடன் போராட்டத்தின் ஓராண்டு நிறைவையொட்டி நாடாளுமன்றம் நோக்கி 29-ந் தேதி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.
பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் கடந்த 24 ந்தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் 3 வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதற்கான மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த மசோதா இன்று தொடங்குகிற நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் தாக்கலாகிறது.
இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்... விடுதலை இந்தியாவில் எந்த ஒரு பிரதமருக்கும் மார்பளவு பெருமையோடு சொல்லப்பட்டது இல்லை. எவ்வளவு விரிந்த மார்பு என்பதில் இல்லை ஒரு அரசின் பலம். விரிந்து பரந்த இதயமே அரசின் தேவை என்பதை விவசாயிகள் சொல்லி கொடுத்துள்ளனர்.
கலப்பைகள் கார்ப்பரேட்டுகளை உழுது அகற்றிய திருநாள் இன்று என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.