தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தாண்டு ஏப்ரல் 6ம் தேதி முதல் மே 10ஆம் தேதி வரை சட்டப்பேரவையில் துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றன. ஆறு மாதத்துக்கு ஒரு முறை தமிழக சட்டப்பேரவையை கூட்ட வேண்டும் என்பது பேரவை விதி என்பதால், தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கூட்டத்தொடரை ஐந்து நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதற்காக தமிழக சட்டப்பேரவை அடுத்த மாதம் இரண்டாவது வாரத்தில் கூட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணை அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை அறிக்கை ஆகிய இரு அறிக்கைகளும் இந்த கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு எதிரான சட்ட மசோதா கொண்டு வரப்படுமா என எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது. மேலும் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு தொடர்பான அறிக்கை கூட்டத்தொடரின் இறுதி நாளில் தாக்கல் செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.