எதிர்ப்புக் குரல்கள் எழுந்தால்தான் தமிழ் மொழி சேர்க்கப்படுமா என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மதுரையைச் சேர்ந்த ரமேஷ்குமார் என்பவர் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், “தொல்லியல் துறையில் முதுகலை படிப்பில் சேர அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதில் தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பை ரத்து செய்து செம்மொழியான தமிழையும் சேர்த்து அறிவிப்பு வெளியிட உத்தரவிட வேண்டும்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு தரப்பில் தமிழ் மொழியையும் சேர்த்து அறிவிப்பு புதிதாக வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள் தொல்லியல் படிப்புக்கான தகுதி பட்டியலில் செம்மொழியான தமிழ் மொழியை முதலிலேயே சேர்க்காதது ஏன் என கேள்வி எழுப்பினர். மேலும், தொடர்ச்சியாக எதிர்ப்புக்குரல்கள் எழுந்தால்தான் தமிழ் மொழி சேர்க்கப்படுமா எனவும் மொழிகள் உணர்வோடு தொடர்புடையவை எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
இதுப்போன்ற நிகழ்வுகளில் மிகவும் கவனமாக கையாள வேண்டும். இதுப்போன்ற எதிர்ப்பு குரல்கள் எழாமல் இருந்திருந்தால் தமிழ் மொழி இணைக்கப்பட்டிருக்குமா என்பன போன்ற சரமாரியாக கேள்விகளை எழுப்பினர்.
மக்களின் அமைதியான வாழ்க்கையில் நீதிமன்ற அக்கறை கொள்கிறது என தெரிவித்த நீதிபதிகள், செம்மொழியான தமிழ் மொழியை விடுத்து தொல்லியல் பட்டயப்படிப்புக்கான அறிவிப்பை வெளியிட்ட அதிகாரி யார் எனவும் அவர் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
பழமையான மொழிகள் எவை எவை? எதன் அடிப்படையில் இதில் பாலி போன்ற மொழிகள் சேர்க்கப்பட்டன என்பது குறித்து பதிலளிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு அக்டோபர் 28 ஆம் தேதிக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.