காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் பிப்ரவரியில் கொடுத்த தீர்ப்பை அமல்படுத்த தேவையான செயல்திட்டத்தை ஒரு வழியாக மத்திய அரசு நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. அதன்படி 9 பேர் கொண்ட காவிரி அமைப்பும் , 9 பேர் கொண்ட ஒழுங்காற்று குழுவும் அமைக்கப்பட வேண்டும் என்பது வரைவுத்திட்டத்தில் சொல்லப்பட்ட அம்சம். காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் சொல்லப்பட்ட அம்சங்களை ஏதோ புதிதாக உருவாக்கியது போன்று மத்திய அரசு சமர்பித்தது. “ சரியான பெயர்” வைத்துக் கொள்ள வேண்டிய திட்டம் என குறிப்பிட்டு, வேண்டுமானால் ”காவிரி நதிநீர் மேலாண்மை திட்டம் 2018” என்று வேண்டுமானால் அழைக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்கள்.
உச்சநீதிமன்றம் காவிரி தீர்ப்பை வழங்கியதும் அதனை செயல்படுத்த காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென அனைவரும் குரல் உயர்த்தினர். ஆனால் கர்நாடக அரசோ அப்படியெல்லாம் அமைக்க விட மாட்டோம் என்றது. ஏன் என்று கேட்டபோது கர்நாடக அணைகளின் கட்டுப்பாட்டை தர முடியாது என்று காரணம் சொன்னது. ஆனால் தமிழகமோ நீர் திறக்கும் கட்டுப்பாடு கர்நாடகாவிடம் இருக்கும் வரை தமிழகத்துக்கு தேவையான தண்ணீர் கிடைக்காது என்றது. ஏனெனில் முந்தைய உதாரணங்கள் அப்படி. இப்பொழுது கூட தண்ணீர் திறக்க முடியுமா என உச்சநீதிமன்றம் கேட்டதற்கே முடியாது என்ற மாநிலம் அது.
தண்ணீர் திறக்க முடியாது என கர்நாடகா சொல்வதற்கு பல காரணங்கள் உள்ளன. பெங்களூருவின் குடிநீர் தேவை, போதிய மழையின்மை, பாசனப்பகுதி அதிகரிப்பு என பட்டியல் நீளும். அப்படிப்பட்ட சமயத்தில் தான் உச்சநீதிமன்றம் தமிழகத்துக்கு சுற்றுச்சூழலை காரணம் காட்டி தீர்ப்பாயம் வழங்கிய 10TMC தண்ணீரை பிடுங்கி மீண்டும் கர்நாடகாவிடம் வழங்கியது. ஆனால் இப்போது வரை ஒதுக்கீடு செய்யப்பட்ட தண்ணீரை வழங்க கர்நாடகம் மறுக்கிறது. இதையெல்லாம் வைத்துதான் காவிரி விவகாரத்தில் அனைத்து அதிகாரங்களும் பொருந்திய காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என தமிழக விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. ஆனால் அது ஸ்கீம் என்றும் அமைப்பு என்றும் அழைக்கப்பட்டு இன்று பெயரில்லா, பெயர் வைக்க வேண்டிய ஒன்றை பரிந்துரைத்திருக்கிறது மத்திய அரசு
பெயரில் என்ன இருக்கிறது, தேவை தண்ணீர் தானே என பாஜகவை சேர்ந்தவர்களும், ஆதரவாளர்களும் கேட்கின்றனர். ஆம் பெயரில் ஒன்றும் இல்லை , அதன் அதிகாரத்தில் இருக்கிறது எல்லாம். தமிழகமும் அதன் விவசாயிகளும் கேட்டது அதிகாரம் மிக்க அமைப்பைத்தான். அது பாஜக என இருந்தால் கூட பிரச்னை இல்லை என்பதே நிதர்சனம். அது ஒரு புறம் இருக்கட்டும். மத்திய அரசு சமர்பித்துள்ள அமைப்புக்கு அத்தகைய அதிகாரங்கள் இல்லையா என்ற கேள்வி இங்கு எழுவது இயல்பு. காவிரி நடுவர் மன்றம் தீர்ப்பு வழங்கிய போது, தீர்ப்பு கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதே அளவு அதனை செயல்படுத்தும் அமைப்பை அமைப்பதும் என்று சொல்லப்பட்டது. மேலும் பக்ரா பியாஸ் போன்ற அமைப்பு சரியாக இருக்கும் என்றும் நடுவர் மன்றம் தெரிவித்தது. ஆனால் அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அமைப்பை உருவாக்கத்தான் 11 ஆண்டுகளாக தமிழகமும் அதன் விவசாயிகளும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசு வரைவு திட்டத்தில் , அமைப்பு இறுதி முடிவெடுக்கும், ஒழுங்காற்று குழு செயல்படுத்தும், பெரும்பான்மை முடிவுக்கு வாக்கெடுப்பு என அனைத்தும் ஏதோ மத்திய அரசு முன்மொழிந்துள்ள அமைப்பு சகல அதிகாரமும் பொருந்தியதாக இருக்கிறது என எண்ண வைக்கிறது. ஆனால் அமைப்பின் அதிகாரம் குறித்த ஷரத்தில் “ அணைகளின் ”கட்டுப்பாடு மாநிலத்திடம் இருக்கும் , ஆனால் அதன் திறப்பை மாநில அரசுகள் அமைப்போடு ஒருங்கிணைந்து மேற்கொள்ளும்” என தெரிவித்து மீண்டும் கார்நாடகாவில் என்ன சிக்கலை சரி செய்ய வேண்டுமென கேட்கிறார்களோ , அந்தச் சிக்கலை அப்படி வைத்து விட்டு ஒரு அமைப்பை முன்மொழிந்திருக்கிறது மத்திய அரசு. ஒட்டுமொத்தமாக காவிரியில் இருக்க கூடிய பிரச்னை என்பது நீர் திறப்பு. அதனை செயல்படுத்துவது கர்நாடகா.
ஒருவேளை காவிரி தீர்ப்பை அமல்படுத்த மாநிலங்கள் ஒத்துழைப்பு தராவிட்டால், காவிரி மேலாண்மை வாரியம் மத்திய அரசை நாடலாம் என தீர்ப்பாய உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்று உச்சநீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட செயல்திட்டத்தில் மத்திய அரசு இந்த விவகாரத்தில் இறுதி முடிவெடுக்கும் உரிமை உள்ள நபர் என மாற்றப்பட்டுள்ளது.
காவிரி வாரியமே இறுதியாக இருந்திருக்க வேண்டிய ஒன்றில் மத்திய அரசின் தலையீடு என்பது தேவையற்ற ஒன்று. ஏனெனில் முழுக்க சுதந்திரமான , அதிகாரம் பொருந்திய அமைப்பாக அது இருந்து விட்டால், மத்திய அரசுக்கு வேலை இல்லாமல் போகும். ஆனால் மத்திய அரசு அதனை விரும்பவில்லை. இப்படி நீர் திறப்பு, அமைப்பின் அதிகாரம் என அனைத்திலும் அதிகாரமில்லா இந்த அமைப்பு ஆலோசகராக செயல்படுமே தவிர , மேலாண்மை செய்யும் ஒன்றாக இருக்க வாய்ப்பில்லை.