மின்சார ரயில்களுக்கான சீசன் டிக்கெட்டுகளின் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த வண்ணம் உள்ளனர்.
கொரோனா நோய்த்தொற்று காரணமாக மே மாதம் 3-ந் தேதி வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் பேருந்து, ரயில், விமானம் என அனைத்து போக்குரவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
முன்னதாக ஏப்., 15 ம் தேதியில் இருந்து ரயில்கள் இயக்கப்படலாம் எனக் கருதி பலரும் ஆன்லைனில் முன் பதிவு செய்து வந்தனர். ஆனால் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால், ரயில்கள் இயங்காது எனவும் பயணிகளின் கட்டணம் திருப்பி அளிக்கப்படும் எனவும் ரயில்வே தெரிவித்தது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பயன்படுத்த முடியவில்லை எனவும் அதன் செல்லுபடியை நீட்டிக்க வேண்டும் எனவும் பலதரப்பில் இருந்து கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து ஒருவர் ட்விட்டர் பக்கத்தில், “ஊரடங்கு உத்தரவுக்கு 13 நாட்களுக்கு முன்பு திருவொற்றியூரிலிருந்து கோடம்பாக்கத்திற்கு 6 மாதங்களுக்கு சீசன் டிக்கெட் எடுத்துள்ளேன். அதை இப்போது வரை நான் பயன்படுத்தவில்லை. அனைத்து சீசன் டிக்கெட்டுகளின் செல்லுபடியை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என ரயில்வே துறைக்கு கோரிக்கை வைக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ரயில்வே அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, “இத்தகைய கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. மீண்டும் ரயில்கள் இயக்கப்படுவது எப்போது என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் நேரத்தில், இதுகுறித்த அறிவிப்புகள் வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது” எனத் தெரிவித்தார்.