முதல்வர் இங்கெல்லாம் கள ஆய்வு மேற்கொள்வாரா? வீடியோ வெளியிட்டு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!

முதல்வர் இங்கெல்லாம் கள ஆய்வு மேற்கொள்வாரா? வீடியோ வெளியிட்டு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
முதல்வர் இங்கெல்லாம் கள ஆய்வு மேற்கொள்வாரா? வீடியோ வெளியிட்டு ஆர்.பி.உதயகுமார் கேள்வி!
Published on

முதலமைச்சரின் கள ஆய்வு மக்களின் கண்ணீரை துடைக்குமா? களத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்படுமா? என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வியெழுப்பினார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள வீடியோவில், "கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் ஒரு பகுதியாக வருகிற 5, 6 ஆகிய நாட்களில் மதுரையில் முதலமைச்சர் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக தேர்தல் அறிக்கையிலே நீங்கள் கொடுத்த 520 வாக்குறுதிகளிலே, மதுரை மாவட்டத்தினுடைய வளர்ச்சிக்காக அறிவித்த திட்டங்கள் கிடப்பிலே உள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் ஆட்சியில் மதுரையின் வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள், செயல்பாடுகள் எல்லாம் கேள்விக்குறியாக இருக்கிறது. இதை முழுக்க, முழுக்க அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு கூறவில்லை.

ஜெயலலிதாவின் ஆட்சிக்காலத்தில் மதுரை, தூத்துக்குடிக்கு பொருளாதார சாலை அமைக்கின்ற அரசாணை வெளியிடப்பட்டது. தற்போது மாவட்ட நிர்வாகத்தால் எந்த நிலைமையில் இருக்கிறது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக இருக்கிறது. ஆகவே தொழில் வளர்ச்சிக்காக மதுரை, தூத்துக்குடி பொருளாதார மேம்பாட்டு சாலை குறித்து முதல்வர் கள ஆய்விலே அதை சேர்த்துக் கொள்வாரா? அதற்குரிய தீர்வு காண்பாரா? என்று மக்கள் எதிர்பார்க்கின்றார்கள்.

அதேபோன்று மதுரை விமான நிலைய விரிவாக்கத்திற்காக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் அண்டர் பாஸ் என்று சொல்லுகிற அந்த கீழ்த்தளங்களிலே வாகனங்கள் செல்வதற்கும், மேல் தளத்திலே விமானம் செல்வதற்கு அந்த ஓடுதளம் அமைப்பதற்கும் மத்திய அரசிடம் இருந்து ஒரு மிகப்பெரிய திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு ஒப்புதலை பெற்று, மத்திய அரசுகளை அனுமதியும் பெற்று தந்தார். மதுரை விமான நிலையத்தினுடைய அந்த விரிவாக்க பணிகளிலே ஏற்பட்டிருக்கிற சுணக்கத்திற்கு முதல்வர் கள ஆய்விலே இந்த விவாதங்களை முன்னெடுத்து அதற்கு தீர்வு காண முன் வருவாரா?

டைடல் பார்க் திட்டத்திற்கு கடந்து முறை மதுரை வந்த போது 600 கோடியில் மதுரை மாட்டுத்தாவணியிலே அமைப்பதாக அறிவித்துச் சென்றீர்கள். ஆனால், அறிவிக்கப்பட்ட அந்த இடம் மதுரை மாநகராட்சி நிர்வாகம், மார்க்கெட் அமைக்க பத்து ஆண்டுகளுக்கு முன் வழங்கிய அனுமதியை ரத்து செய்து விட்டார்களா என்பதையும்? அங்கே மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பாக மார்க்கெட் அமைக்க வேண்டும் என்ற அந்த கோரிக்கையும் வைக்கப்பட்டிருக்கிறது. அதையும் கள ஆய்வுக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

அதேபோன்று 40 ஆண்டு காலத்திற்கு மதுரை மக்களுக்கு குடிநீர் பற்றாக்குறையை போக்குவதற்காக, புரட்சித் தலைவர் நூற்றாண்டு விழாவிலே முன்னாள் முதலமைச்சர் எடப்பாடியார் 1,296 கோடி அளவிலே கூட்டுக் குடிநீர் திட்டத்தை அறிவித்தார்கள். தற்போதைய நிலை குறித்து கள ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படுமா?

எல்லாவற்றையும் விட எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த இடத்தை மத்திய அரசிடம் எடப்பாடியார் வழங்கி, எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைய வேண்டும், தமிழ்நாட்டிற்கு பெற்றுத் தரவேண்டும் என்ற அடிப்படையில் அந்த சாதனையை சாதித்து காட்டினார். ஆனால், இன்றைக்கு அந்த எய்ம்ஸ் மருத்துவமனையில் செங்கலை காட்டிய காலத்தை கழிக்கிற ஒரு நிலைமை இருக்கிறது. மதுரை மக்கள் பலமுறை கோரிக்கையை வைத்திருக்கிறார்கள் ஒரு முறையாவது எய்ம்ஸ் மருத்துவமனை எங்கே அமைய இருக்கிறது, அதுக்கு ஒதுக்கப்பட்ட இடம் அரசு நிலத்தை ஒரு முறைகூட பார்வையிடவில்லை, முதலமைச்சர் பார்க்கிறபோது அது முக்கியத்துவம் பெறும் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று. ஆகவே அதை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.

40 ஆண்டு கால கனவுத் திட்டமான 58 கால்வாய் திட்டத்திற்கு எடப்பாடியார் ஆட்சி காலத்தில் தண்ணீர் விடப்பட்டது அதற்கு நிரந்தர அரசாணையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும். முல்லைப் பெரியார் அணையால் மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை, திண்டுக்கல் போன்ற மாவட்டங்கள் பயன்பெற்று வருகிறது. ஆனால், கேரளா அரசு சந்தடி சாக்கிலே பாதுகாப்பு குறித்து பல்வேறு அச்சங்களை, சந்தேகங்களை வதந்திகளை உருவாக்குவதோடு அதில் புதிய அணை கட்டியேய தீருவோம் என்று கேரள முதல்வர் பேசி வருகிறார்.

தமிழ் இனத்திற்காக, தமிழ்நாட்டு மக்களின் குடிநீருக்காக பஞ்சம் வந்துவிடாமல் பாதுகாப்பதற்காக தென் மாவட்ட மக்களுடைய அந்த நீண்ட நாள் கோரிக்கையாக எதிர்பார்ப்பாக இருக்கிற 152 அடியாக உயர்த்துகிற காலத்தை உருவாக்குவதற்கு, முதலமைச்சர் கள ஆய்வில் ஆய்வு செய்ய முன்வருவாரா என்பதை தென் மாவட்ட மக்கள் எதிர்பார்த்து இருக்கிறார்கள்.

ஒட்டுமொத்த இளைய சமுதாயம் எதிர்பார்ப்பாக இருக்கிற நீட் தேர்வு ரகசியத்தை முதலமைச்சர் மதுரை கள ஆய்வில் வெளியிடுவாரா? எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடைய தொகுதியிலே மேற்கொள்ளப்பட்ட அந்த பணிகள் எல்லாம் தடையின்றி செய்வதற்கு ஆய்வு மேற்கொள்வதற்கு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். வடபழஞ்சியில் இருக்கும் தகவல் தொழில்நுட்ப பூங்காவை மேம்படுத்தி, கட்டிடங்களை உருவாக்கி அதில் உடனடியாக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை தருவதற்கு முதலமைச்சர் கள ஆய்வு மேற்கொள்வாரா?

ஒட்டுமொத்தத்தில் மதுரையில் இருக்கும் இட்லி தொழிற்சாலை தவிர, பொங்கல் தொழிற்சாலை தவிர ,புளியோதரை தொழிற்சாலை தவிர, உற்பத்தி செய்கிற தொழிற்சாலைகளை உருவாக்குவதற்கு எத்தனை சவால்களையும் இன்றைக்கு நாம் எதிர் கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கெல்லாம் கள ஆய்வு மேற்கொள்வாரா?

கோரிப்பாளையம் பாலம், பெரியார் பேருந்து நிலையத்தில் அமைய இருக்கும் பாலங்கள், மேலமடையில் அப்போலோ மருத்துவமனை அருகே நெருக்கடியை தீர்ப்பதற்காக அமைக்கப்பட இருக்கும் பாலங்கள், அதேபோன்று வைகை நதிக்கரையில் இருபுறமும் அமைந்திருக்கும் பாதையை மேம்பாலங்களில் முழுமையாக செய்வதற்கு ஆய்வில் எடுத்துக் கொள்வாரா?

மதுரையிலே சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்துவதற்கும், கல்லூரிகள் மற்றம் பள்ளி கட்டடங்களும் அடிப்படை வசதி இன்றி உள்ளது. அதையும் கள ஆய்வில் எடுத்துக் கொண்டுள்ள வேண்டும். அதேபோல், மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியிலே சிக்கித் தவித்து வருகிறது. அதை சீர்படுத்தி, மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தை காப்பாற்றுவதற்கு முதலமைச்சர் கள ஆய்விவில் முன் வைக்கப்படுமா?

முதலமைச்சருடைய இரண்டு நாள் கள ஆய்வு தென் மாவட்ட மக்களுக்கு விடிவுகாலம் பிறக்குமா அல்லது இன்றைக்கு இருளிலே மூழ்குமா? சொத்துவரி உயர்வு, ,மின்சார கட்டண உயர்வு, பால்விலை உயர்வு, விலைவாசி உயர்வு, என வேதனையில் இருக்கும் மக்களுக்கு முதலமைச்சர் கள ஆய்வில் விடிவு பிறக்குமா அல்லது வேதனையின் உச்சத்திற்கு கொண்டு செல்லுமா? முதலமைச்சர் கள ஆய்வு மக்கள் கண்ணீரை துடைக்குமா? களத்தில் செயல்பாட்டில் இருக்குமா என்று மதுரை மக்கள் சார்பில் கேட்டுக் கொள்வதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com