பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி இன்று திருச்சி வருகிறார். இப்பயணத்தின் போது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் உள்ளிட்டோருடன் தமிழக அரசியல் சூழல்கள், தேர்தல் கூட்டணி குறித்து பிரதமர் ஆலோசிக்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பிரதமருடன் பேச தமிழக பாஜக சார்பில் நேரம் கேட்கப்பட்டுள்ளது. பிரதமர் திருச்சியில் உள்ள அதே நேரத்தில் அங்கு பாஜக மாநில நிர்வாகிகள் கூட்டமும் நடைபெற உள்ளது.
பாஜகவுடனான கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்ட பிறகு பிரதமர் முதல்முறையாக தமிழகம் வருவதும் குறிப்பிடத்தக்கது. பாஜகவுடன் மீண்டும் கூட்டணி இல்லை என அதிமுக தொடர்ந்து திட்டவட்டமாக தெரிவித்து வருகிறது. கடந்த சில தினங்கள் முன்பு நடந்த அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய பின் முதல்வருக்கு தூக்கமே போய்விட்டது. பாஜகவுடன் கூட்டணியில் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். 25.9.2023 அன்று தலைமைக் கழகத்தில் நடந்த கூட்டத்தில் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு” என தெரிவித்திருந்தார். அதே நேரம் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச பாஜக முயற்சித்து வருவதாகவும் தகவல்கள் உள்ளன.
தமிழகத்தில் 39 மக்களவை தொகுதிகள் இருந்தாலும் 10 தொகுதிகளில் மட்டுமே பாஜகவினர் முனைப்பாக தேர்தல் பணியாற்றி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையே பிரதமர் மோடியை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்திக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது போன்ற சூழலில் பிரதமரின் வருகை முக்கியத்துவம் பெறுகிறது. அண்ணாமலையின் நடைபயணம் அடுத்த மாதம் நிறைவு பெற உள்ள நிலையில் அதில் பங்கேற்க பிரதமர் வர உள்ளதாக கூறப்படுகிறது. அப்போது தேர்தல் கூட்டணி குறித்து பேசப்படும் என பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.