பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை அடையாறில் உள்ள எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க சென்னை காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களை சுட்டிக்காட்டி கல்லூரியில் தேர்தல் நடத்துவதை தவிர்க்க வேண்டும் எனப் பட்டினப்பாக்கம் காவல்துறை பரிந்துரைத்தது. அதன் அடிப்படையில் இந்த வழக்கு தொடரப்பட்டது.
இந்நிலையில், விஷால் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது என்று நீதிபதி உத்தரவிட்டார்.
மேலும், “நந்தனம் ஓய்.எம்.சி.ஏ, கோடம்பாக்கம் மீனாட்சி கல்லூரி மாற்று இடத்தை பரிந்துரைக்க வேண்டும். நடிகர் சங்க தேர்தலை விட மக்களின் பாதுகாப்பே முக்கியம். எம்.பி., எம்.எல்.ஏ தேர்தலை விட நடிகர் சங்க தேர்தலுக்கு முக்கியத்துவனம் தரப்படுகிறது. மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு ஈசிஆர், ஓஎம்ஆர் பகுதிகளில் தேர்தலை நடத்த ஆட்சேபனையில்லை” என்று நீதிபதி தெரிவித்தார்.
வெகுதொலைவில் தேர்தல் நடத்தினால் வாக்களிக்க பெரும்பாலானோர் வர மாட்டார்கள் என நடிகர் சங்கம் தரப்பில் வாதிடப்பட்டது. ஆனால், நீதிபதி அதனை ஏற்க மறுத்துவிட்டார்.