கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 32 மாவட்டங்கள் இருந்த நிலையில் சமீபத்தில் கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு தமிழகத்தில் உள்ள மாவட்டங்களின் எண்ணிக்கை 33 ஆனது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தென்காசியை, தனி மாவட்டமாக பிரிக்கக் கோரி, நீண்ட நாட்களாக அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர்.
அதேபோல் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள செங்கல்பட்டை தனி மாவட்டமாக அறிவிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டது. அதன்படி தென்காசி, செங்கல்பட்டு ஆகிய நகரங்கள் புதிய மாவட்டங்களாக உருவாக்கப்படும் என்று தமிழக சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று அறிவித்தார். இரண்டு மாவட்டங்களுக்கும் அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் அவர் அறிவித்தார்.
தென்காசி, செங்கல்பட்டு போலவே கும்பகோணத்தை தனி மாவட்டமாக்க வேண்டுமென்றும் நீண்டகாலமாக அம்மாவட்ட மக்களால் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இதனைக் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கும்பகோணத்தை தனி மாவட்டமாக்கும் கோரிக்கை உள்ளதால், அதுபற்றியும் விரைவில் அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ளார்