அம்மா உணவகத்தின் ஆண்டு வருவாய் தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 2013ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அம்மா உணவகத்தில் ஆண்டு வருவாய் 40 கோடி ரூபாய். இது படிப்படியாக குறைந்து 25 கோடி ரூபாய் அளவிற்கு வந்திருக்கிறது.
கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சியில் 207 அம்மா உணவகங்கள் உருவாக்கப்பட்டன. இங்கு குறைந்த விலையில் உணவுகள் விற்பனை செய்யப்பட்டதால் ஆரம்பத்தில் அம்மா உணவகத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும் கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்கள் சிலவற்றில் இலவசமாக உணவு வழங்கப்பட்டதால் ஏழை மக்களுக்கு பெரிதும் உதவியாக இருந்தது. 2019 - 2020ஆம் நிதியாண்டில் அம்மா உணவகத்தின் வருவாய், அதற்கு முந்தைய நிதியாண்டின் வருவாயைவிட 3 கோடி ரூபாய் குறைவு என கூறப்படுகிறது.
அதாவது 2018 - 2019ஆம் நிதியாண்டில் அம்மா உணவகத்தின் வருவாய் 28.63 கோடி ரூபாயாக இருந்தது. அதுவே 2019 - 2020ஆம் நிதியாண்டில் ரூபாய் 25.34 கோடியாக குறைந்திருக்கிறது. சென்னையில் மட்டும் 400க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களும். தமிழகம் முழுவதும் 700க்கும் மேற்பட்ட அம்மா உணவகங்களும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் சில இடங்களில் பராமரிப்பு பணிகள் முறையாக நடக்கவில்லை என்றும், உணவின் தரம் குறைவாக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுவே வருமானம் குறையவும் காரணமாக சொல்லப்படுகிறது. சில ஆண்டுகளாக இழப்புகளை சந்தித்து வரும் அம்மா உணவகத்தை மேம்படுத்த வேண்டுமென சென்னை மாநகராட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
மேலும் உணவகத்தை மேம்படுத்தத் தேவையான நிதியை திரட்ட நிறுவனம் ஒன்றையும் அமைக்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை மாநகராட்சி கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு அம்மா உணவக நிறுவனம் அமைக்க அனுமதி வழங்கியுள்ளது.
கேள்வி: கொரோனா காலத்தில் ஆபத்பாண்டவனாக இருந்த அம்மா உணவகங்கள் பலருக்கும் உணவு கொடுத்தது. அம்மா உணவகம் தொடங்கிய ஆண்டில் இருந்து படிப்படியாக வருவாய் குறைந்து கொண்டே வருகிறது. இதற்கு தரமில்லாமல் சுகாதாரமற்ற முறையில் வழங்கும் உணவு இவற்றோடு நிர்வாக ரீதியான பிரச்னைதான் காரணமா?
சசிரேகா (அதிமுக)
பதில்: தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்கள் மிகச்சிறப்பாக இயங்கிக் கொண்டிருக்கின்றன. நீங்கள் சொன்ன சுகாதாரமற்ற முறையில் என்ற வார்த்தை தேவையற்றது என்று நான் நினைக்கிறேன். அம்மா உணவகங்களில் வருவாய் குறைவுக்கு காரணம் கொரோனா காலம்தான். இந்த காலத்தில் அனைவருக்கும் இலவசமாக உணவுகள் கொடுக்கப்பட்டன. இங்கு சாப்பிடக்கூடிய கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்களின் வருகை இல்லாததால் வருவாய் குறைந்துள்ளது.
கேள்வி: 2013ஆம் ஆண்டு அம்மா உணவகங்கள் தொடங்கப்பட்ட போது இருந்த வரவேற்பு படிப்படியாக குறையத் தொடங்கியிருக்கிறதா. அதன் செயல்பாடுகளில் ஏற்படும் நிதிச் சிக்கலுக்கு காரணம் என்ன?
பாலச்சந்திரன் (ஐஏஎஸ் ஓய்வு)
பதில்: அம்மா உணவகங்களை தொடங்கியதில் தமிழ்நாடுதான் இந்தியாவிற்கே முன்னோடியாக இருந்தது. சுயஉதவிக் குழுக்கள் மூலமாக நடத்தப்பட்டதால் அவர்கள் உற்சாகமாக நல்ல உணவை சமைத்துக் கொடுத்தார்கள். இப்போது சுகாதாரமும் உணவின் தரமும் குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இதை சரிசெய்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.
எந்த ஒரு திட்டத்தையும் நிதி ஆதாரம் இல்லாமல் ரொம்ப நாள் நடத்த முடியாது. அம்மா உணவகங்களுக்கு சரியான முறையில் நிதி ஆதாரங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இதுபோன்ற திட்டங்கள் எதிலும் அரசியல் வரக்கூடாது. இந்த திட்டத்திற்கு யார் வேண்டுமானலும் நிதியுதவி செய்யலாம். ஆனால் அம்மா உணவகங்களை மாநகராட்சி மற்றும் நகராட்சிகள் தான் நடத்த வேண்டும்.