கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்தியன் வங்கியின் மேலாளர், மகளிர் குழுவினரிடம் பணமோசடி செய்ததாக பெண்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை இந்தியன் வங்கியில் துடுபு என்ற மகளிர் குழுவைத் சேர்ந்த ஆறு பெண்கள கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 50 ஆயிரம் வீதம் லோன் எடுத்துள்ளனர். இந்த லோன் பணத்தை மாதமாதம் தவணை முறையில் கட்டி வந்தனர். இதில் ஒருவர் லோனை கட்ட இயலாத நிலையில், மற்றவர்களின் வங்கிக் கணக்கில் இருந்து அவரிகளின் அனுமதி இல்லாமல் பணம் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் வங்கி மேலாளரிடம் பெண்கள் முறையிட்டும் பணம் திரும்ப வராத நிலையில், காவல் நிலையத்தில் புகார் அளித்து முறையிட்டனர். அங்கும் சரியான தீர்வு இல்லாததால் இன்று சுமார் 20-க்கும் மேற்பட்ட பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த திடீர் சாலை மறியலால் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்து உடனடியாக அங்கு விரைந்து வந்த ஊத்தங்கரை காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து சாலை மறியலில் ஈடுபட்ட அனைவரும் கலைந்து சென்றனர். இந்தியன் வங்கியை கண்டித்து பெண்கள் சாலை மறியல் செய்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.