கொரோனா முதல் அலையில், வயதானவர்கள் - வாழ்வியல் பாதிப்பு இருப்பவர்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருந்தனர். தற்போது இரண்டாவது அலையில், குழந்தைகள் மற்றும், இணை பாதிப்புகளில்லாத இளைய தலைமுறையினர் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இளைய தலைமுறை எனும்போது, 18 முதல் 45 வயதுக்குட்பட்டோர் அனைவருமே வந்துவிடுகின்றனர். இவர்களில், கர்ப்பிணிகளும் இருப்பதால், அவர்கள் சார்ந்து நாம் அதிகம் கவனம் எடுக்க வேண்டியுள்ளது. அதிலும் கர்ப்பிணியாக இருந்து, முன் கள பணியாளராகவும் இருக்கக்கூடியவர்கள் மீது அதீத கவனம் கொடுக்கவேண்டியிருக்கிறது.
ஆனால் அந்த கவனத்தை கொடுத்திருக்கிறோமா என்றால், கேள்விக்குறிதான். முன்கள கர்ப்பிணி பணியாளர்களில், பிறரைவிடவும் காவலர்களுக்கு எளிதாகவும் அதிகமாகவும் கொரோனா தொற்று பரவி வருகிறது. தரவுகளின்படி, சென்னையில் கடந்த இரண்டு நாட்களில் 66 காவலர்களுக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதுவரை மொத்தம் 324 காவலர்கள் கொரோனா தொற்றினால் பாதிப்பிற்குள்ளாகி உள்ளனர். அவர்களில் 14 காவலர்கள் கொரோனாவால் உயிரிழந்திருக்கின்றனர். இதை தவிர்க்க, காவலர்களுக்கு வேகமாக தொற்று பரவி வருவதால் காவல்துறை சார்பில் அவர்களுக்கு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் மிகக்குறிப்பாக 50 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் காவல் நிலைய பணிகளில் மட்டுமே ஈடுபட வேண்டும், தேவையான பட்சத்தில் மட்டுமே கைது நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் போன்ற ஆலோசனைகளை காவல்துறையினருக்கு ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் அறிவுரை வழங்கி, அதையே உத்தரவாகவும் பிறப்பித்துள்ளார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட காவலர்களுக்கென பிரேத்யேகமாக கோவிட் கேர் சென்டர் அண்ணா பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால் இது எவற்றிலும், கொரோனாவால் எளிதாக பாதிக்கப்பட கூடிய கர்ப்பிணி காவலர்களுக்கு எந்தவிதமான தனி அறிவுரைகளும், ஓய்வு குறித்த விவரங்களும் வழங்கப்படவில்லை. இதுவொரு குற்றச்சாட்டாக இப்போது எழுந்துள்ளது.
அடிப்படையில், கர்ப்பிணி காவலர்களுக்கு 6 மாத ஓய்வும், அலுவலக சம்பந்தமான பணிகளை மட்டுமே வழங்க வேண்டும் என்ற உத்தரவு இருந்து வருகிறது. ஆனால் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக இரவு நேர மற்றும் ஞாயிறன்று முழு ஊரடங்கு போடப்பட்டுள்ளதால் ரோந்து பணிகள், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள், வாகன தணிக்கை, சட்டம் ஒழுங்கு போன்ற பல பணிகளில் காவலர்கள் ஈடுபட்டு வருவதால் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதெனக் கூறி, காவல்துறை உயர் அதிகாரிகள் கர்ப்பிணி காவலர்களை வரவழைத்து அலுவலக பணிகளை வழங்கி வருவதாக குற்றம்சாட்டு எழுந்துள்ளது. கர்ப்பிணி காவலர்களுக்கு கொரோனா வேகமாக பரவும் அபாயம் உள்ளதால் காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் ஓய்வு வழங்கி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
கடந்த ஆண்டு இதேபோன்றொரு நிலை ஏற்பட்டபோது, கர்ப்பிணி காவலர்களுக்கு சம்பளத்துடன் ஓய்வு வழங்கப்பட்டது. கம்ப்யூட்டர் தொடர்பான பணிகளை வீட்டிலிருந்தே செய்து வந்தனர். தற்போதும் அது போல வழங்க வேண்டும் என்று கர்ப்பிணி காவலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னையில் மொத்தம் 137 காவல் நிலையங்கள் உள்ளது. 35 மகளிர் காவல் நிலையங்கள் உள்ளது. இந்த அனைத்து காவல் நிலையங்களிலும் கர்ப்பிணி காவலர்கள் எத்தனை பேர் என்பது தொடர்பாகவும், அவர்களது முழு விவரங்களை காவல் ஆய்வாளர்கள் கணக்கெடுத்து தங்களது உயர் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அதனை காவல் துறை உயர் அதிகாரிகள் காவல் ஆணையர் அலுவலகத்தில் தெரிவிக்கும்படியும் உத்தரவிடப்பட்டுள்ளதாக காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆகவே விரைவில் கர்ப்பிணி காவலர்களின் பணி குறித்த அறிவுப்புகள் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.
- சுப்ரமணியன்