தமிழர்களின் தொன்மைகளை அழுத்தமாகவும், ஆதாரபூர்வமாகவும் உலகிற்கு தெரிவிக்கும் நோக்கில் தமிழகத்தில் அகழாய்வு, பண்பாட்டு ஆய்வு பணிகளை தமிழக தொல்லியல் துறை விரைவில் விரிவுபடுத்துகிறது.
அதன்படி, தாமிரபரணி நதிக்கரை நாகரீகத்தின் உச்சத்தை கண்டறியும் நோக்கில் தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூரிலும், சிவகளையிலும் மீண்டும் அழகாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதேபோல, நெல்லையில் தாமிரபரணி ஆறு பாயும் பகுதிகளின் இருமருங்கிலும் உள்ள தொன்மையான இடங்கள் அகழாய்வு பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
அத்துடன் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழ்வாராய்ச்சியை போல அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொந்தகை, மணலூர், அகரம் உள்ளிட்ட இடங்களிலும் ஆய்வு பணிகள் விரிவுப்படுத்தப்படவுள்ளன. இதனைபோன்று, ஈரோடு மாவட்டம் கொடுமணலிலும் அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட உள்ளது.
இதுமட்டுமின்றி, கற்கால மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்துகொள்ளும் நோக்கில் வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மாவட்டங்களிலும் கள ஆய்வும் மேற்கொள்ளப்படவுள்ளது. முக்கியமாக தமிழர்களின் கடல்சார் வாணிப முறைகளை துல்லியமாக தெரிந்துகொள்வதற்காக ஆழ்கடல் அகழாய்வு பணிகளையும் தமிழக தொல்லியல்துறை மிக விரைவில் மேற்கொள்ளவுள்ளது.
ஏற்கெனவே பூம்புகார், கொற்கை, அழகன்குளம் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட கடல்சார் அகழாய்வில் (Underwater Archeology) தமிழகத்திற்கும் - ரோமானிய சாம்ராஜ்ஜியத்திற்கும், இடையே நடந்த வணிகம் தொடர்பான ஆதாரங்கள் கிடைத்திருக்கும் நிலையில், இதனை இன்னும் விரிவுபடுத்தி தொல்லியல்துறை பணிகளை தொடங்கவிருக்கிறது. இந்தத் தகவலை தமிழக தொல்லியல்துறை ஆணையர் உதயசந்திரன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார்.