தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே வனப்பகுதியில் கட்டப்பட்ட நீர் தொட்டிகளில் நீர் நிரப்பாததால் வனவிலங்குகள் நீர் தேடி விளைநிலங்களுக்கு வருவதாக விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
மேற்கு தொடர்ச்சி மலை தேவதானப்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட கும்பக்கரை அருவி, சோத்துப்பாறை, செழும்பு, புலிக்கூடு, முருகமலை, மஞ்சளார் உள்ளிட்ட வனப்பகுதி 13வது வனவிலங்குகள் சரணாலயமாக உள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் போதிய மழை இல்லாததாலும், தொடர்ந்து காட்டுத் தீ பற்றி எரிந்து வருவதாலும் அங்குள்ள நீர் நீரோடைகள் மற்றும் நீர்த்தேக்கங்களில் முற்றிலும் நீர் வற்றிப்போய் உள்ளது.
இதனால் வனவிலங்குகள் நீரைத் தேடி அருகில் உள்ள விளைநிலங்களுக்கு வருவதோடு, பயிர்களை சேதப்படுத்துவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டுகின்றனர். எனவே, வனவிலங்குகளுக்காக கட்டப்பட்டுள்ள தொட்டியில் நீர்நிரப்ப கோரிக்கை விடுக்கின்றனர். இதுகுறித்து, தேவதானபட்டி வனசரக அதிகாரியிடம் கேட்ட போது வனப்பகுதியில் உள்ள நீர் தொட்டிகளில் நீர் நிறப்ப உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.