கூடலூரில் உணவு தேடி ஊருக்குள் வரும் காட்டு யானைகள் வீடுகளை சேதப்படுத்துவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதிகளில் வனப்பகுதியை விட்டு வெளியேறி உணவு தேடி ஊருக்குள் காட்டு யானைகள் வருவது அதிகரித்துள்ளது. அவ்வாறு வரக் கூடிய காட்டு யானைகள் உணவிற்காக விவசாய பயிர்களையும், வீடுகளையும் சேதப்படுத்தி வருகிறது.
இந்த நிலையில் கூடலூர் அருகே உள்ள கோக்கால், 4 ஆம் நம்பர் கிராமத்திற்குள் காட்டு யானை கூட்டம் ஒன்று வந்துள்ளது. கூட்டத்திலிருந்த யானைகள் உணவுக்காக வீட்டை உடைத்த நிலையில், குட்டியானை ஒன்று வீட்டிற்குள் நுழைந்து உணவுப் பொருட்களை தின்று சேதப்படுத்தியுள்ளது.
காட்டு யானைகள் நடமாட்டத்தால் மக்கள் இரவு நேரங்களில் வெளியே நடமாட முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே வனத்துறையினர் உரிய பாதுகாப்பை ஏற்படுத்தித் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.