நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள புளியம்பாறை பகுதியில் நேற்று இரவு முதல் இரண்டு காட்டு யானைகள் உணவு தேடி குடியிருப்பு பகுதியில் சுற்றி திரிந்துள்ளது. எனவே எந்தவித அசம்பாவிதங்களும் நடைபெறாமல் இருக்க இரண்டு யானைகளையும் வனத்துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து விரட்டும் பணியில் ஈடுபட்டு வந்தனர்.
அதில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று காலை 5.30 மணி அளவில் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்ப முற்பட்டுள்ளது. அப்போது வழியில் விவசாய நிலத்தில் இருந்த மரத்தில், யானை முட்டி சாய்த்துள்ளது.
சரிந்த மரம் அவ்வழியாக சென்ற மின் கம்பியின் மீது விழவே அதில் பாய்ந்த மின்சாரம் யானையை தாக்கியுள்ளது. இதில் யானை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயரிழந்திருக்கிறது. சம்பவ இடத்தில் வனத்துறையினர் மற்றும் மின்வாரிய துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.