பூமி முதல் விண்வெளி வரை உள்ள இயற்கை, வரலாறு, கட்டடக்கலை, மருத்துவம், புவியியல், கலைகள் உள்ளிட்ட பல்வேறு துறைசார்ந்த தகவல்களை அறிந்துகொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டதுதான் என்சைக்ளோபீடியா. அச்சு பிரதியில் என்சைக்ளோபீடியா செய்த பணியை, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக டிஜிட்டல் வடிவமாக கடந்த 2001ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி முதல் வழங்கி வருகிறது, விக்கிப்பீடியா.
விக்கிமீடியா பவுண்டேசன் என்கிற அமைப்பின் மூலம் உருவான விக்கிப்பீடியா தளத்தில் இதுவரை 61 மில்லியன் கட்டுரைகள் 300க்கும் மேற்பட்ட மொழிகளில் இடம்பெற்றுள்ளன. ஆங்கிலத்தில் மட்டும் 66 லட்சத்திற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வெளியாகி உள்ளன. ஆங்கிலம், பிரெஞ்ச், ஸ்பானிஷ், போர்ச்சுகீஸ், தமிழ், மலையாளம் இந்தி உள்ளிட்ட மொழிகளில் தகவல்களை வழங்கும் விக்கிப்பீடியாவில், யார் வேண்டுமானாலும் தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவேற்றம் செய்யலாம் என்பதால் ஓபன் சோர்ஸ் மீடியமாக அது செயல்படுகிறது.
நாம் கேட்கும் ஒரு விஷயம் தொடர்பான அடிப்படை விவரங்களை, நமக்கு அள்ளித் தருகிறது, இந்த விக்கிப்பீடியா. அப்படி தெரியாத தகவலை தெரிந்துகொள்வதற்காக கூகுள் தேடுபொறி மூலம் விக்கிப்பீடியாவுக்குள் நுழைந்து, அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைக் கைதி ஒருவரை வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்துள்ளது பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம்.
மதுரை திடீர் நகர், காவல் நிலையத்தினர் முகநூலில் சோதனை செய்துகொண்டிருந்தபோது, சட்டப்படி அமைக்கப்பட்ட இந்திய அரசுக்கு மாற்றாக இஸ்லாமிய கலீஃபா அரசை அமைப்பது தொடர்பாக பதிவிட்டதாக சியாவுதீன் பாகவி மீது சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சியாவுதீன் தாக்கல் செய்த மனுவை விசாரித்த என்.ஐ.ஏ. சட்டத்தின் கீழ் பதிவான வழக்குகளை விசாரிக்கும் பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம், அவர் சார்ந்துள்ள அமைப்பைப் பற்றி தெரிந்துகொள்வதற்காக விக்கிப்பீடியாவை நாடியுள்ளது. அதில் கிடைத்த தகவலின் அடிப்படையில் வழக்கிலிருந்து விடுவிக்க மறுத்துள்ளது.
விக்கிப்பீடியா விவரங்களை ஆதாரமாகக் கொண்டு தனக்கு எதிராக எடுத்த முடிவை எதிர்த்து சியாவுதீன் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ”விக்கிப்பீடியா என்பது இணையவழி என்சைக்ளோபீடியாவாக இருந்தாலும் சட்ட விவகாரங்களில் தீர்வு காண்பதற்கான சான்றாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என உத்தரவிட்டுள்ளது.
ஓப்பன் சோர்ஸ் மீடியமாக உள்ள விக்கிப்பீடியாவை விலக்கி வைத்துவிட்டு, உச்ச நீதிமன்ற உத்தரவுகளை உறுதுணையாகக் கொண்டு, சியாவுதீனின் கோரிக்கையை மீண்டும் விசாரித்து முடிவெடுக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.
கற்றது கையளவு; கல்லாதது உலகளவு என்று சொல்வார்கள், ஆனால் விக்கிப்பீடியாவில் கிடைப்பது கடல் அளவு ஆக இருந்தாலும், நீதி பரிபாலத்திற்கு கடுகளவும் பயன்படாது என்பதை உச்ச நீதிமன்ற உத்தரவைச் சுட்டிக்காட்டி உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு தெளிவுபடுத்துகிறது.
- முகேஷ்