தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் காந்தி நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி. இவர் எல்லை பாதுகாப்புப் படையில் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். இவருடைய மனைவி சத்தியமாதவி. இவர்களுக்குத் திருமணமாகி ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். கருப்பசாமி கேரளம் மாநிலம் கோழிக்கோடு பகுதியில் பணிபுரிந்து வருகிறார்.
இந்தநிலையில் கருப்பசாமிக்கும் அவருடைய மனைவிக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததால் சத்தியமாதவி குழந்தைகளுடன் தனியாக ஒரு வாடகை வீட்டில் வசித்து வருகிறார். விடுமுறை நாளில் சொந்த ஊருக்கு வந்த கருப்பசாமி சத்தியமாதவியிடம் இருந்த தனது மகளை அழைத்துச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சத்தியமாதவி சங்கரன்கோவிலில் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். மகளிர் போலீசார் ஆலங்குளம் காவல்நிலையத்தில் புகார் அளிக்கச் சொல்லித் திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது. ஆலங்குளம் காவல்நிலையம் சென்று புகார் அளித்த போது சங்கரன்கோவில் காவல்நிலையத்தில் புகார் அளிக்க போலீசார் அறிவுறுத்தியாக தெரிகிறது. 2 காவல்நிலையத்திலும் தன்னுடைய புகாரை போலீசார் ஏற்காததால் மனமுடைந்து போன சத்தியமாதவி சங்கரன்கோவில் பழைய பேருந்து நிலையம் முன்பு நடுரோட்டில் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இதனையடுத்து அங்குப் பாதுகாப்புப் பணியிலிருந்த போக்குவரத்துக்கு போலீசார் ஓடிவந்து சத்தியமாதவி மீது தண்ணீரை ஊற்றிக் காப்பாற்றினார்.
இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்து வந்த போலீசார் சத்தியமாதவியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் தனது மகளை ஒப்படைக்கும் வரை எங்கும் வரமாட்டேன் எனப் பிடிவாதமாக இருந்துள்ளார். பின்னர் கருப்பசாமியைத் தொடர்பு கொண்ட போலீசார் குழந்தையை அழைத்து வந்து சத்தியமாதவியிடம் ஒப்படைத்து சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.
சங்கரன்கோவிலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சாலையில் இளம்பெண், அதுவும் இன்ஸ்பெக்டரின் மனைவி தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.