தன்னுடைய கணவரை எஸ்.ஐ தான் திட்டமிட்டு ஆள் வைத்து கொன்றதாக, காவலர் ஜெகதீஷனின் மனைவி சந்தேகம் எழுப்பியுள்ளார்.
கண்ணீரில் கரைந்து கொண்டிருக்கிறார் ஐந்து மாத கர்ப்பிணியான மார்க்ரெட். இரவு மகனுடன் கொஞ்சி விளையாடிய கணவர் ஜெகதீசன், மணல் கொள்ளையரை பிடிக்க வருமாறு வந்த அழைப்பையடுத்து பணிக்கு விரைந்த நிலையில், காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டதை எண்ணி இந்த இளம்பெண் கதறிக் கொண்டிருக்கிறார். மணல் கொள்ளையரை பிடிக்க வருமாறு சிறப்புப்பிரிவு காவலர் ஜெகதீசனை பணிக்கு வரவழைத்த எஸ்ஐ விளக்கம் அளிக்க வேண்டும் என்று கோருகிறார் மார்க்ரெட்.
இதுகுறித்து ஜெகதீஷனின் மனைவி மரிய ரோஸ் மார்க்ரெட் கூறுகையில், “டி.எஸ்.பி அலுவலகத்தில் இருக்கும் போது என்னுடைய கணவர் ஒரு துப்பாக்கி கொண்டு வருவார். ஆனால், எஸ்.பி. அலுவலகத்தில் இருந்த போது துப்பாக்கி இல்லை. என்னுடைய கணவரை திட்டமிட்டு கொன்றுவிட்டார்கள். எஸ்.ஐ தான் ஆள் வைத்து கொன்றுவிட்டார். மணல் கொள்ளையர்களை பிடிக்க எப்படி ஒருவர் மட்டும் செல்வார்?. மற்ற நான்கு போலீசாரும் ஏன் தூங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களும் செல்ல வேண்டியதுதானே?” என்று கதறி அழுது கொண்டே தெரிவித்தார்.
அதேபோல், மணல் கொள்ளையரை பிடிக்கவென்று வரவழைத்து, சிறப்புப்பிரிவு காவலரான ஜெகதீசனை தனியாக அனுப்பி அவரை கொலை செய்துவிட்டதாக உறவினர்களும் குற்றம்சாட்டுகிறார்கள். ஜெகதீசனின் உடலை வாங்க மறுத்து அரசு மருத்துவமனை முன்பாக உறவினர்கள் சாலை மறியல் செய்த நிலையில், அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய மாநகர காவல்துறை துணை ஆணையர், ஜெகதீசன் கொலைக்கு காரணமானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
நம்பியாற்றில் மணல் கொள்ளை நடப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததாகவும், இதையடுத்து விஜயநாராயணம் காவல்நிலையத்தைச் சேர்ந்த 5 பேர் கொண்ட காவலர்கள் நம்பியாற்று பகுதிக்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது. ஆய்வு முடிந்து காவலர்கள் திரும்பிய நிலையில், ஜெகதீசன் மட்டும் திரும்பாததால் மீண்டும் தேடியபோது சிறப்புப்பிரிவு காவலர் ஜெகதீசன் தலையில் அடிப்பட்ட காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.
நம்பியாற்றுப்பகுதியில் மணல் திருட வந்தவர்கள், ஜெகதீசனை அடித்து கொலை செய்தார்களா என்ற சந்தேகத்தில் முத்துகிருஷ்ணன், முருகவேல், மணிகண்டன் ஆகியோரை கைது செய்துள்ள காவல்துறையினர் முருகன் என்பவரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.