சேலம்: லாட்டரி சீட்டு விற்பனை செய்த EX MLA-வின் மனைவி! கையும் களவுமாக கைதுசெய்த காவல்துறை!
சேலம் மாவட்டம், ஓமலூர் நகர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது அதிகரித்து வந்துள்ளது. இதனால், ஏழை எளிய மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவது மட்டுமின்றி தங்களுடைய பணத்தையும் இழந்து வருவதாக பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் ஓமலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர்.
அந்தப் புகார்களின் பேரில் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது ஓமலூர் அருகே உள்ள புளியம்பட்டி பகுதியில் பெண் ஒருவர் செல்போன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்த பெண், தருமபுரி சட்டமன்றத் தொகுதி முன்னாள் தே.மு.தி.க எம்.எல்.ஏ பாஸ்கரின் மனைவி மனோன்மணி என்பதும், இவர் தனது கணவரைப் பிரிந்து வந்து 10 ஆண்டுகளாக ஓமலூர் அருகே புளியம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருவதும் தெரிய வந்தது. மேலும், இவர் கடந்த 5 ஆண்டுகளாக மூன்று நம்பர் லாட்டரி சீட்டு விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், செல்போன் மற்றும் லாட்டரி விற்பனை மூலம் கிடைத்த பணத்தையும் பறிமுதல் செய்து, அவரை எச்சரித்து பிணையில் விடுவித்தனர்.
முன்னாள் எம்.எல்.ஏ மனைவி லாட்டரி சீட்டு விற்பனை செய்த வழக்கில் கைதாகி பிணையில் விடுவிக்கப்பட்ட சம்பவம் ஓமலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.