கோவை வனப்பகுதியில் உரிய அனுமதியின்றி நடைபயணம் சென்ற குழுவில் பெண் ஒருவர் யானை மிதித்து உயிரிழந்தார்.
கோவை மாவட்டம் பெரியநாயக்கன் பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியான குஞ்சூரிலிருந்து மாங்குழி செல்லும் சாலையில் சிலர் நடைபயணம் சென்றிருக்கின்றனர். அவர்கள் வனத்துறையின் எவ்வித அனுமதியும் பெறாமல் அத்துமீறி நுழைந்து நடைபயணம் மேற்கொண்டதாக, வனத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடந்து சென்றுகொண்டிருக்கும் பொழுது, திடீரென ஆண் காட்டு யானை ஒன்று வந்துள்ளது.
அதைக்கண்டதும் நடைபயணம் சென்றவர்கள் அலறி ஓட, புவனேஸ்வரி என்ற பெண்ணும், அவரது கணவர் பிரசாந்த் என்பவரும் யானையிடம் சிக்கியுள்ளனர். அவர்களில் புவனேஸ்வரியை யானை மிதித்திருக்கிறது. இதில் படுகாயமடைந்த புவனேஸ்வரி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது கணவர் மட்டும் உயிர் பிழைத்துள்ளார். இதையடுத்து உயிரிழந்த பெண்ணின் உடலை வனத்துறையினர் மீட்டுள்ளனர்.
இதுதொடர்பாக விசாரணை செய்தபோது, அந்தக் குழுவினர் இதுபோன்று பலமுறை அனுமதி பெறாமல் வனத்திற்குள் நடைபயணம் சென்றிருப்பது தெரியவந்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக துடியலூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.