நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே, குடும்பத் தகராறு காரணமாக கணவனின் கழுத்தை அறுத்து கொலை செய்த மனைவி கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை அடுத்த மோடமங்கலம் கிராமம் எம்ஜிஆர் நகரில் வசித்த வந்தவர் கல்யாணசுந்தரம். தறித்தொழிலாளி. இவருக்கு ஏற்கெனவே திருமணம் ஆகி முதல் மனைவி மற்றும் குழந்தைகள் உள்ள நிலையில் தன்னுடன் வேலை செய்து வந்த பூங்கொடி என்பவரை இரண்டாவதாக திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்தார். மேலும் இவர்களுக்கு 21 வயதில் ஒரு மகனும் 19 வயதில் ஒரு மகனும் என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இந்நிலையில் கல்யாண சுந்தரத்திற்கு பூங்கொடியின் நடத்தையில் சந்தேகம் இருந்துள்ளதால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில் காலையில் வேலைக்கு செல்வதாக கல்யாணசுந்தரம் கூறியபோது, பூங்கொடியுடன் வாய்ச் சண்டை ஏற்பட்டுள்ளது. அப்போது ஏற்பட்ட தகராறில் கோபமடைந்து கல்யாண சுந்தரத்தை கீழே தள்ளிவிட்ட பூங்கொடி வீட்டில் இருந்த கத்தியால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளார்.
இதனையடுத்து கல்யாணசுந்தரம் தானே கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொண்டதாகவும் பூங்கொடி நாடகமாடியுள்ளார். பின்னர் சற்று நேரத்தில் இச்சம்பவம் குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் சந்தேகத்தின்பேரில், பூங்கொடியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அப்போது பூங்கொடி முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த போலீசார் உரிய முறையில் விசாரித்த போது வேறு சில பெண்களுடன் தொடர்பு வைத்திருந்தாகவும், தனது நடத்தையில் சந்தேகம் கொண்டு அடிக்கடி தகராறு செய்து வந்ததாகவும் கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட சண்டையின் போது, ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதனை அடுத்த பூங்கொடியை கைது செய்த ஊரக போலீசார் சம்பவம் குறித்து மேலும் விசாரனை நடத்தி வருகின்றனர்.