அதிமுக பொதுக்குழு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது எடப்பாடி பழனிசாமி தரப்பினர் ஓபிஎஸ் தரப்பினருக்கு எதிரான அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தனர்.
அதிமுக பொதுக்குழு தொடர்பாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் உறுப்பினர் வைரமுத்து சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கு மீண்டும் கடந்த ஜனவரி மாதம் 5ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஷ்வரி, ரிஷிகேஷ் ராய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, பன்னீர்செல்வம் தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டது.
அப்போது, “ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு ஒரு வருடத்திற்குள் பொதுச் செயலாளர் பதவிக்கான தேர்தல் நடத்தி இருந்தால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற புதிய பதவிகள் தேவைப்பட்டிருக்காது. ஆனால், அப்போது அதனைச் செய்யாத எடப்பாடி பழனிசாமி தற்போது புதிய பதவிகளை உருவாக்கியதற்கு பின்னர் பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வர முயல்வது அதிமுகவின் சட்ட விதிகளுக்கு முரணானது.
பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்று கோரிக்கை வைத்தால், அதன் மீது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் முடிவு எடுக்கலாம் என்றுதான் விதிமுறை இருக்கிறதே தவிர, எடப்பாடி பழனிசாமி தரப்பினர் கூறுவதுபோல இல்லை. மேலும் பொதுச் செயலாளர் பதவி காலியானால் அதற்கான தேர்தல் நடைபெறும் வரை அப்போது பதவியில் இருக்கக்கூடிய நபரே தொடர்வார்.
ஜெயலலிதாவே அதிமுகவின் நிரந்தர பொதுச் செயலாளர் என்றும் அந்த பதவிக்கு தேர்தல் நடத்தப்படாது என்றும் ஏற்கனவே அதிமுக விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டதற்கு பிறகு அதில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினர் செயல்பட்டுள்ளனர். அதிமுகவில் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி அதுவும் அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஒரே பதவி பொதுச்செயலாளர் பதவி. ஆனால் அதை குறுக்கு வழியில் எடப்பாடி பழனிசாமி பெற்றுள்ளார். ஆக, பொதுக்குழுவைக் கூட்டியதும் அதில் முடிவுகள் எடுத்ததும் முழுக்க முழுக்க சட்ட விரோதம்” என பன்னீர் தரப்பில் வாதம் வைக்கப்பட்டது.
இதையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு தொடர்புடைய மேல்முறையீடு மனுக்கள் மீதான விசாரணையை ஜனவரி 10ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். அதன்படி, இன்று தொடங்கிய விசாரணையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
எடப்பாடி பழனிசாமி தரப்பில், ”ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய இரண்டு பதவிகளை நீக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உண்டு. அதிமுக அடிப்படை உறுப்பினர்களின் முகமாகத்தான் பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் பொதுக்குழு உறுப்பினர்களால் கொண்டு வரப்பட்டன.
2017இல் அதிமுக விதிமுறைகளில் மாற்றமும் பொதுக்குழு உறுப்பினர்களால் கொண்டுவரப்பட்டது. 2 பதவிகளை உருவாக்க பொதுக்குழுவுக்கு அதிகாரம் உள்ளது எனில், நீக்குவதற்கும் அதிகாரம் உள்ளது. இந்த முக்கியமான இரு பதவிகளை உருவாக்கியபோது தொண்டர்களிடம் செல்லுமாறு பன்னீர்செல்வம் தெரிவிக்காதது ஏன்?. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் செயற்குழுவால் தேர்வு செய்யப்பட்டதை பொதுக்குழு இன்னும் அங்கீகரிக்கவில்லை. பொதுக்குழுவிற்கே உச்சபட்ச அதிகாரம் இருக்கிறது. செயற்குழுவால் மேற்கொள்ளப்படும் தீர்மானங்களுக்கு பொதுக்குழு ஒப்புதல் தேவை.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு அந்த ஒப்புதல் இல்லை. இரட்டை தலைமையில் ஏற்பட்ட குழப்பத்தால்தான் கட்சியில் மீண்டும் ஒற்றை தலைமை தேவை என்ற நிலை ஏற்பட்டது. கட்சியின் நலனை கருதி ஒற்றை தலைமை கொண்டு வருவது எப்படி தவறாகும். கட்சியின் நலனுக்கு தேவை என்றால் அதைதானே செய்ய வேண்டும். இடைக்கால பொதுச்செயலாளர் தவறு என்றால், ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் மட்டும் எப்படி சரியாகும்? பொதுச்செயலாளர் என்ற பதவி மட்டும் இருப்பதுதானே சரியாக இருக்கும்.
அதனால், பொதுச்செயலாளர் பதவியை தேர்வு செய்ய தேர்தல் அறிவிக்க பொதுக்குழுவில் முடிவு செய்தோம். ஜூலை 11ஆம் தேதிக்கான பொதுக்குழு அறிவிப்பு ஜூன் 23ஆம் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. இது ஓ.பன்னீர்செல்வத்திற்கும் தெரியும். அவர்தான் பொதுக்குழுவிற்கு வராமல் கட்சி விதிகளை மீறினார். பொதுக்குழுவில் விதிகளை பின்பற்றும் நபர்களே அடிப்படை உறுப்பினராக இருக்க முடியும் என்று கட்சி விதி கூறுகிறது. அதை ஓ.பன்னீர்செல்வம் மீறியதால் அவர் கட்சியில் இருந்தே நீக்கப்பட்டார்” என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் வைக்கப்பட்டுள்ளது.