வேல்யாத்திரைக்கு விதிக்கப்பட்ட தடை தொடர்பான வழக்கில் பாஜகவுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சரமாரியான கேள்விகளை முன்வைத்துள்ளார். வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக தாக்கல் செய்த அவசர மனு மீதான விசாரணையின் போது இந்தக் கேள்விகளை நீதிபதி முன்வைத்தார்.
தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நவம்பர் 6 முதல் டிசம்பர் 6-ம் தேதி வரை வேல் யாத்திரை நடத்தப்பட இருந்தது. அதன்படி திருத்தணியில் ஆரம்பிக்கப்பட இருந்த வேல் யாத்திரை இறுதியாக 6ம் தேதி திருச்செந்தூரில் முடியவிருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக தமிழக அரசு வேல் யாத்திரைக்கு அனுமதி தர மறுத்தது. இருப்பினும் தடையே மீறி வேல் யாத்திரை நடத்திட பாஜக திட்டமிட்டது.
இதையடுத்து நேற்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வேலுடன் திருத்தணிக்கு புறப்பட்டு சென்ற தமிழக பா.ஜனதா தலைவர் எல்.முருகன் முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். பின்னர் திருத்தணியில் தடையை மீறி தொடங்கிய பாஜகவின் வேல் யாத்திரையை போலீசார் தடுத்து நிறுத்தினர். வேல் யாத்திரையை தொடங்கிய மாநில தலைவர் எல்.முருகனை போலீசார் கைது செய்தனர்.
இந்நிலையில் வேல்யாத்திரைக்கு தடை விதித்த தமிழக டிஜிபியின் உத்தரவை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜக அவசர மனு தாக்கல் செய்துள்ளது. இன்று மாலை இந்த அவரச மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றம் நடைபெற்றது. நீதிபதி எம்.சத்தியநாராயணா முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.
அப்போது "கடவுள் முருகரின் அறுபடை வீட்டுக்கு செல்வதுதான் உங்கள் யாத்திரையின் நோக்கமாக இருந்தால் ஏன் முருகனின் கோயில் இல்லாத இடங்களுக்கு செல்கிறீர்கள். இந்த யாத்திரைக்கு எத்தனை பேர் செல்கிறார்கள் ? எத்தனை வாகனங்கள் செல்லும் ? அதில் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் ? இந்த விவரங்கள் எல்லாம் எங்களுக்கு தேவை"
மேலும் "நாளிதழ்களில் வெளியான செய்திகள் புகைப்படங்களை ஆகியவற்றை வைத்து யாத்திரையில் எத்தனை பேர் பங்கேற்றார்கள் என்ற விவரங்களை எங்களால் சேகரிக்க முடியும். கொரோனா காலத்தில் மதரீதியான ஊர்வலங்களை நடத்தலாம் என்பது மத்திய அரசின் வழிக்காட்டுதல்தானே தவிர நடத்திய தீர வேண்டும் என்ற அவசியமில்லை" என்றார் நீதிபதி சத்தியநாராயணா.
"ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவராக இருக்கும் நீங்கள் இப்போதுள்ள சூழலை புரிந்துக்கொள்ள வேண்டும். இது கொரோனா காலம் மட்டுமல்ல, இது பருவமழைக் காலமும் கூட. காவல்துறையும், வருவாய் துறையும் அந்த விவகாரங்களையும் கவனிக்க வேண்டும்" என்றார். இதற்கு பதிலளித்த பாஜக சார்பில் ஆஜரான வழக்கறிர் ராவாச்சாரி "கோயிலுக்கு செல்லும்போது 100 பேர் மேல் செல்லமாட்டோம்" என்றார்.
அதற்கு நீதிபதி "அப்போது யாத்திரைக்கு அனுமதி கேட்டு புதிதாக டிஜிபிக்கு மனு அளியுங்கள்" என்றார். அப்போது குறுக்கிட்ட அரசுதரப்பு வழக்கறிஞர் "நேற்றைய யாத்திரையில் எத்தனை பேர் மாஸ்க் அணியாமல் சென்றார்கள் என்ற வீடியோ ஆதாரங்கள் என்னால் காட்ட முடியும்" என்றார்.