3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்ததாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்,
நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பாக மூன்று மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. அவை 1. விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் (அதிகாரம் மற்றும் பாதுகாப்பு) சட்டம், 2. விவசாயிகள் விளைபொருட்கள் வாணிபம் மற்றும் வர்த்தகம் (ஊக்குவித்தல் மற்றும் உதவுதல்) சட்டம் 3. அத்தியாவசியப் பொருட்கள் திருத்தச் சட்டம்.
இந்தச் சட்டங்கள் மக்களவையில் விவாதத்திற்கு வந்தபோது அ.தி.மு.க. அதனை ஆதரித்தது. இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், இந்தச் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானது என்றும் வேளாண் விற்பனைக் கூடங்களுக்கும் உழவர் சந்தைக்கும் எதிரானது என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.
இந்த நிலையில், இந்தச் சட்டங்களை அதிமுக ஏன் ஆதரித்தது என விளக்கமளித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, 3 வேளாண் மசோதாக்களிலும் விவசாயிகளுக்கு ஆதரவான அம்சங்கள் இருந்ததால் அதிமுக ஆதரவு அளித்ததாக அவர் தெரிவித்துள்ளார்,
வேளாண் மசோதாவை மாநிலங்களவையில் எதிர்த்துப் பேசியது குறித்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியனிடம் விளக்கம் கேட்கப்படும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.
கோட்டையில் பாஜக கொடி பறக்கும் என தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் கூறியது பற்றிய கேள்விக்கு, 'அதிமுக ஆட்சியே தொடரும்' என முதல்வர் எடப்பாடி பதிலளித்துள்ளார்.
சசிகலா தொடர்பாக செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதிலளிக்க மறுத்து விட்டார்.