ரவுடி சங்கர் என்கவுண்டர் செய்யப்பட்டது ஏன் என்பது குறித்து கமிஷனர் மகேஷ் குமார் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று காலை 6.30 மணி அளவில் கீழ்ப்பாக்கம் நியூ ஆவடி சாலையில் ரவுடி சங்கர் என்பவர் போலீஸ் என்கவுண்டர் செய்யப்பட்டார். குண்டு காயத்துடன் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். ஆனால் வரும் வழியிலேயே அவர் இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
ரவுடி சங்கர் அரிவாளால் அயனாவரம் காவலர் முபாரக் என்பவரை வெட்டினார். இன்ஸ்பெக்டர் சங்கரை எச்சரித்தார். ஆனாலும் சங்கர் கேட்காமல் வெட்டியதால் என்கவுண்டர் செய்யப்பட்டார். காவலர் முபாரக் காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார். ரவுடி சங்கர் மீது 3 கொலை வழக்கு, 4 கொலை முயற்சி வழக்கு உள்பட 50 வழக்குகள் இருக்கிறது.
5 பிடிவாரண்டுகள் இருக்கிறது. 9 முறை குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா வழக்கில் பிடிபட்டபோது என்கவுண்டர் நடந்துள்ளது. 3 குண்டுகள் ரவுடி சங்கர் மீது பாய்ந்து உயிரிழந்துள்ளார். மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அடுத்தக்கட்டமாக மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற உள்ளது.
சென்னை ரவுடிகள் சிலர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தலைமறைவான ரவுடிகள் தேடி கைது செய்யப்படுவார்கள். சிறையில் அடைக்கப்படுவார்கள். என்கவுண்டர் குறித்து மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற உள்ளதால் அது குறித்து மேலும் பேசுவது சரியாக இருக்காது" என்றார்.