இந்துசமய அறநிலையத்துறை நிலங்களை ஆக்கிரமித்து கட்டடங்களை எழுப்பும் வரை காத்திருக்கும் அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக் கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் பந்தநல்லூர் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி கோவில் நிலத்தை மீட்க கோரிய வழக்குகளை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், பி.டி.ஆதிகேசவலு விசாரித்தனர். அப்போது, கோவில் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பெரிய கட்டுமானங்கள் கட்டப்பட்டது, மூன்றாவது நபர் நீதிமன்றத்திற்கு கொண்டுவந்த பிறகுதான் அறநிலையத்துறைக்கே தெரியவருகிறது என்று நீதிபதிகள் வேதனையுடன் சுட்டிக்காட்டினர்.
கோவில் நிலங்களில் கட்டடங்கள் கட்ட உள்ளாட்சி அமைப்புகள் எப்படி அனுமதித்தது என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்த விதிமீறல்களை அனுமதித்தவர்கள், தடுக்காதவர்கள் குறித்த விவரங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இது தொடர்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், "அறநிலையத்துறை ஆய்வாளர்கள் முறையாக செயல்படாததால் தான் இதுபோன்ற நிலை ஏற்படுகிறது. இவர்கள் அறநிலையத்துறை ஆணையரின் கவனத்துக்கு உடனுக்குடன் ஆக்கிரமிப்புகள் குறித்த தகவலை கொண்டு சென்றிருக்க வேண்டும். முறையாக செயல்படாத இந்த அதிகாரிகளின் ஓராண்டு ஊதியத்தை ஏன் பிடித்தம் செய்யக்கூடாது? கோவில் நிலத்தில் கட்டிடம் கட்டி முடிக்கப்படும்வரை காத்திருந்து அதன்பின்னர் நோட்டீஸ் அனுப்புகின்றனர். இதுபோன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என தெரிவித்துள்ளனர்.