திருமண உதவி திட்டம் பெண்களுக்கான உயர்கல்வி திட்டமாக மாற்றப்பட்டது ஏன்? என்று சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
அடுத்த நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். தியாகராஜன் சட்டப்பேரவையில் அண்மையில் தாக்கல் செய்தார். இதில், அதிமுக ஆட்சியின் போது செயல்படுத்தப்பட்டு வந்த திருமண உதவி திட்டம் பெண்களுக்கான உயர்கல்வி திட்டமாக மாற்றப்பட்டது. அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயின்று உயர்கல்வி படிக்க செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை வழங்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், திருமண உதவி திட்டத்தை நிறுத்தியது குறித்து சட்டப்பேரவையில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:
”திருமணம் என்ற தகுதிக்கு முன்பு கல்வி என்ற நிரந்தர சொத்து பெண்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். அதனைக் கருத்தில்கொண்டே திருமண உதவித் திட்டம் உயர்கல்வி திட்டமாக மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக் கல்வியை முடித்த பெண்களில் வெறும் 46 சதவீதம் பேர் மட்டுமே உயர்கல்வியில் சேருகின்றனர். இதனால் பெண்களின் கல்வி பெருமளவில் பாதிக்கப்படுகிறது.
இந்த நிலையை மாற்றுவதற்காகவே, உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் திருமண உதவித் திட்டத்தின் கீழ் ஆண்டுதோறும் 1 லட்சம் பேர் மட்டுமே பயனடைந்து வந்தனர். ஆனால், பெண்களுக்கான உயர்கல்வி திட்டத்தின் மூலம் இனி ஆண்டுதோறும் 6 லட்சம் பெண்கள் பயனடைய உள்ளனர். எனவே, கட்சி வேறுபாடின்றி இத்திட்டத்தை அனைவரும் ஆதரிக்க வேண்டும்” இவ்வாறு மு.க. ஸ்டாலின் பேசினார்.