பங்குகளை விற்க அரசு முடிவு.. எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள் பயப்படுவது ஏன்..?

பங்குகளை விற்க அரசு முடிவு.. எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள் பயப்படுவது ஏன்..?
பங்குகளை விற்க அரசு முடிவு.. எல்ஐசி ஊழியர்கள், பாலிசிதாரர்கள் பயப்படுவது ஏன்..?
Published on

இந்தியாவின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள‌ பொதுத்துறை நிறுவனங்களில் பொன்முட்டையிடும் வாத்தாக திகழ்கிறது எல்ஐசி. இக்கட்டான தருணங்களில் அரசின் நிதித் தேவைகளை பூர்த்தி செய்து உதவி வருகிறது. மத்திய அரசு தீட்டும் பல்வேறு திட்டங்களுக்கு எல்ஐசி நிறுவனம் தொடர்ந்து கோடிக்கணக்கில் நிதி கொடுத்து வருகிறது. நிதிசார்ந்த பல இக்கட்டான சூழல்களிலும் எல்ஐசி நிறுவனம்தான் அரசுக்கு கைகொடுத்துள்ளது. பிஎஸ்என்எல், ஏர் இந்தியா போன்ற அரசின் நிர்வாகத்தில் உள்ள பெரும்பாலான பொதுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் தத்தளித்துக்கொண்டிருக்க, இதில் விதிவிலக்காக தனியார் துறை போட்டியை முறியடித்து தலை நிமிர்ந்து நிற்கிறது எல்ஐசி.

இந்நிலையில் எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்ற அறிவிப்பு அதன் எதிர்காலம் குறித்த சந்தேகங்களை அந்நிறுவன பணியாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது. சென்னை உள்ளிட்ட நகரங்களில் அவர்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர். இந்த சூழலில் கோடிக்கணக்கான பாலிசிதாரர்களின் நம்பிக்கையை அரசு காப்பாற்ற வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். எல்ஐசியால் அரசு பெரும் பலன்களை அடைந்து வரும் நிலையில் அதன் உள்ளே தனியார் வந்துவிட்டால் சூழ்நிலை மாறும் என்று எல்ஐசி ஊழியர்கள் அச்சம் தெரிவிக்கிறார்கள்

பொதுத்துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சியின் சொத்து மதிப்பு 2019-ஆம் ஆண்டு நிலவரப்படி 31 லட்சத்து 11 ஆயிரத்து 847 கோடி என புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எல்.ஐ.சி நிறுவனத்தில் 29 கோடி பாலிசிதாரர்கள் உள்ளதாகவும், சுமார் 2 கோடியே 14 லட்சம் பாலிசிகளை விற்பனை செய்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 2018-19ஆம் ஆண்டு வரை 2 கோடியே 59 லட்சம் காப்பீடுகளுக்கு முதிர்வுத் தொகையை எல்.ஐ.சி வழங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. 2019ஆம் நிதியாண்டு வரை எல்.ஐ.சி செய்த முதலீடு 29 லட்சத்து 30 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளதாகவும் புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், எல்ஐசியின் பங்குகள் விற்கப்படும் என்ற மத்திய அரசின் அறிவிப்பு நாடெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உட்பட நாடெங்கும் அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஒரு மணி நேர போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசின் இந்த அறிவிப்பு குறித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் செந்தில்குமார் கூறுகையில், “எல்ஐசி ஊழியர்களுக்கு பாதிப்பு இல்லை. ஊழியர்களுக்கு பணிப் பாதுகாப்பு தொடரும். நாங்கள் வாங்கிக்கொண்டிருந்த சம்பளம் தொடரும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது. எங்களுக்கு பிரச்னை என்னவென்றால், மக்கள் இந்த நிறுவனத்தின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கைக்கு அரசுதான் பாதுகாப்பு அளிக்க வேண்டும். ” எனத் தெரிவித்தார்.

பொதுக் காப்பீட்டு ஊழியர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் கூறுகையில், “எல்ஐசியின் விதிமுறைகள் மாற்றப்படுவதற்கு வாய்ப்புள்ளது. பாலிசிதாரர்களுக்கு வழங்கப்படும் பலன்கள் மாற்றப்படலாம். லாபத்துக்காகத்தான் தனியார் முதலீடு செய்வார்கள். பங்குகளை வாங்கி உள்ளே வரும் தனியார் லாப நோக்கில் மட்டுமே சிந்திப்பார்கள் என்பதால், எல்ஐசியின் சமநிலை தகர்க்கப்படும். இதுபோன்ற சந்தேகங்களுக்கு அரசு விளக்கமளிக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.

இதனிடையே எல்.ஐ.சி பங்கு விற்பனை குறித்து அரசு தரப்பும் விளக்கங்களை கொடுத்துள்ளது. அதாவது, “தங்கள் முடிவால் எல்ஐசியின் நலனும் பாலிசிதாரர்கள் நலனும் எந்த வகையிலும் பாதிக்கப்படாது. எல்ஐசி பங்குகளை பொது மக்களும் வாங்கலாம் என்பதால் அந்நிறுவன செயல்பாடுகள் மேலும் வெளிப்படையாகும். பங்குச் சந்தை வணிகம் மேலும் விரிவடையும்” என விளக்கியுள்ளார் மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாக்கூர்.

மத்திய நிதித்துறை செயலாளர் ராஜீவ் குமார் “எல்ஐசியின் 100% பங்கும் அரசின் வசம் தற்போது உள்ளது. இதில் குறைந்த அளவு மட்டுமே விற்கப்பட உள்ளது. இதனால் எல்ஐசியின் நிர்வாக அதிகாரம் தொடர்ந்து அரசின் வசமே இருக்கும். எல்ஐசி தனியார் கைக்கு செல்வதாக வெளியாகும் தகவலில் உண்மை இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com