"உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை ஏன்?" - தீர்ப்பின் முழு விவரம்

"உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை ஏன்?" - தீர்ப்பின் முழு விவரம்
"உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை ஏன்?" - தீர்ப்பின் முழு விவரம்
Published on

உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி விடுதலை செய்யப்பட்டது ஏன் என்ற விளக்கம் உயர்நீதிமன்ற நீதிபதிகள் அளித்த தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலைபேட்டை சங்கர் ஆணவக் கொலை, தமிழ்நாடு முழுவதும் மிகப் பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. அதன்படி உடுமலை சங்கர் கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை விடுதலை செய்யப்பட்டுள்ளார். மற்ற 5 பேரின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கவுசல்யாவின் தாய் அன்னலட்சுமி உள்பட 3 பேரின் விடுதலையை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது. விடுதலையை எதிர்த்து காவல் துறை தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவையும் உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. இதுமட்டுமில்லாமல், ஒருவருக்கு விதித்த ஆயுள் தண்டனை, மற்றொருவருக்கு விதித்த 5 ஆண்டு சிறை தண்டனையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தீர்ப்பின் முழு விவரம்:-

ஏராளமான சாட்சியங்களையும், ஆதாரங்களையும் அரசுத்தரப்பு காட்டிய போதும், சின்னசாமி மீதான குற்றச்சாட்டுக்களை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க தவறி விட்டது. குற்றச்சதி குற்றச்சாட்டை பொறுத்தவரை, சந்தர்ப்ப சூழ்நிலைகளின் அடிப்படையிலேயே நிரூபிக்க முடியும். ஆனால், அரசுத்தரப்பு இந்த சந்தர்ப்ப சூழ்நிலைகளை கோர்வையாக நிரூபிக்கத் தவறிவிட்டது.

வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிகண்டனையும், மதனையும் உடுமலைப்பேட்டையில் உள்ள லாட்ஜில் சின்னசாமி தங்க வைத்தார் என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை. பழனி பூங்காவில் சின்னசாமியை மூன்று பேர் சந்தித்து பேசியதாக கூறும் குற்றச்சாட்டு சந்தேகத்திற்கு இடமானதாக உள்ளது. இதுசம்பந்தமாக சாட்சியளித்தவர்களுக்கு சின்னசாமியைத் தவிர வேறு எவரையும் தெரியாது.

குற்றம் சாட்டப்பட்ட ஜெகதீசன் மற்றும் மணிகண்டனை கைது செய்த முக்கிய சாட்சியான உடுமலைப்பேட்டை காவல் ஆய்வாளர் வெங்கட்ராமனை விசாரிக்கவில்லை. காவல் ஆய்வாளரான அவர், சம்பவம் குறித்து தகவல் அறிந்தும் உடனடியாக புகார் தெரிவிக்கவில்லை. சின்னசாமி ஏடிஎம்–மில் இருந்து பணம் எடுத்து சங்கரை கொல்வதற்காக ஜெகதீசனிடமும், செல்வகுமாரிடமும் கொடுத்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை ஆதாரங்களுடன் நிரூபிக்க காவல்துறை தவறி விட்டது. அதனால் சி்ன்னசாமி, அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யப்படுகிறார்.

"அன்னலட்சுமிக்கு பழிவாங்கும் எண்ணம் இல்லை"

வழக்கின் சாட்சிகள் மற்றும் ஆதாரங்களிலிருந்து, கௌசல்யாவின் தாய் அன்னலட்சுமிக்கு பழிவாங்கும் எண்ணம் இருந்தது என்பது நிரூபிக்கப்படவில்லை என்பதால் திருப்பூர் நீதிமன்ற தீர்ப்பில் தலையிட எந்த காரணமும் இல்லை. அதேபோல, அவரது தாய்மாமா பாண்டிதுரை, உறவினர் பிரசன்னகுமார் விடுதலையிலும் தலையிட எந்த காரணமும் இல்லை. இவர்கள் மூன்று பேரின் விடுதலையை எதிர்த்த காவல்துறை மேல் முறையீட்டு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.

"ஆயுள் தண்டனை பெற்றவர்களுக்கு 25 ஆண்டுகள் சிறை"

மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைப்பு பெற்ற ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேருக்கும் ஏற்கனவே அனுபவித்த தண்டனையை கழித்துக் கொள்ள வேண்டும். இவர்கள் 5 பேரும் குறைந்தபட்சம் 25 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவிக்க வேண்டும். எந்த சலுகையின் அடிப்படையிலும் விடுவிக்கப்படக்கூடாது.

மற்ற குற்றம் சாட்டப்பட்டவர்களுடன் மொபைலில் சின்னசாமி பேசியுள்ளார் என்பதைத் தவிர, குற்றச்சதியில் அவரை சம்பந்தப்படுத்த வேறு எந்த ஆதாரங்களும் இல்லை. அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படாததால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சின்னசாமி, தன்ராஜ், மணிகண்டன் ஆகியோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், உடனடியாக சிறையில் இருந்து விடுவிக்கவேண்டும்.

"கௌசல்யாவின் சாட்சியத்தில் சந்தேகம் எழும்"

முதல் சாட்சியான கவுசல்யா, குறுக்கு விசாரணையின்போது ஆறு பேர் தன்னையும், தன் கணவரையும் தாக்கியதாகக் கூறினார். ஆனால், ஐந்து பேரை மட்டுமே அடையாளம் காட்ட முடிந்தது. கொலையாளிகள் பயன்படுத்திய ஆயுதங்களைப் பற்றியும் அவரால் கூற முடியவில்லை. விசாரணையின் ஆரம்ப கட்டமான முதல் தகவல் அறிக்கை பதிவிலேயே சில குறைபாடுகள் இருந்துள்ளன என்பது இந்த வழக்கின் சாட்சியங்களில் இருந்து தெரிகிறது.

ஒரு குற்றம் நடைபெற 90 வினாடிகள் ஆகலாம். இதை நேரடி சாட்சியால் எளிதில் மறக்க முடியாதது. முழு நினைவுடன் இருந்த கௌசல்யா பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவத்தை அவர் நிச்சயமாக நினைவில் வைத்திருக்க முடியும். முதலில் ஆறு பேர் தாக்கினார்கள் எனக் கூறிய கௌசல்யா, பின்னர் ஐந்து பேர் என மாற்றிக் கூறியுள்ளார். நிமிடத்திற்கு நிமிடம் நடந்ததாக விவரங்களை கூறும் போதே, அரசுத் தரப்பு சொல்லிக் கொடுத்ததை சொன்ன கிளிப்பிள்ளையைப் போல சொல்லியிருக்கிறார் என்ற சந்தேகமே எழும். நேரில் பார்த்த சாட்சியின் சாட்சியம், கோர்வையாகவும், நம்பகத்தன்மையுடனும், இருந்தால், அதுவே தண்டனை விதிக்க போதுமானதாக இருக்கும்.

"மரண தண்டனை ரத்து ஏன்?"

திட்டமிட்டு, இரக்கமற்ற முறையில் கொலை செய்வது; அப்பாவி குழந்தைகள், ஆயுதங்களற்ற நபர்கள், பெண்கள் மற்றும் முதியோர்கள் கொடூரமான முறையில் கொல்லப்படுவது போன்ற வழக்குகளில் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கலாம். கொடூர குற்றவாளிகள் மனம் திருத்தவோ, சீர்திருத்திக் கொள்ளவோ வாய்ப்பில்லை. அப்படிப்பட்ட நபர்களை விடுவித்தால் அது சமூகத்திற்கு அச்சுறுத்தலானது.

இந்த வழக்கில் ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேரும் இளம் வயதினர். இதற்கு முன் எந்த குற்றச்செயல்களிலும் ஈடுபட்டதில்லை. இவர்கள் தங்களை திருத்திக் கொள்வதற்கு வாய்ப்புள்ளது என்பதால், இவர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்படுகிறது.

"தாக்கப்பட்டது நிரூபணம் - குற்றச்சதியை நிரூபிக்கவில்லை"

சங்கர் மீதான தாக்குதலின் போது காயமடைந்தவர்கள் அளித்த சாட்சியத்தை நிராகரிக்க எந்த காரணமும் இல்லை. இந்த வகையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட ஜெகதீஷ், மணிகண்டன், செல்வக்குமார், கலை தமிழ்வாணன், மதன் ஆகிய ஐந்து பேருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்களை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. ஆனால் அவர்கள் குற்றச்சதியில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை. அதேசமயம், கொலை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com