‘அதிகார பகிர்வு.. ஆட்சியில் பங்கு’ என விசிக தலைவர் திருமாவளவன் அண்மையில் பேசியிருந்தார். தொடக்க காலத்திலிருந்தே இதுதான் தங்கள் கட்சியின் கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார். நேற்று முதலமைச்சரை சந்தித்த பின் பேசிய திருமாவளவன், அதிகாரப் பகிர்வு குறித்து தேர்தல் நேரத்தில் குரல் எழுப்புவோம் எனக் கூறியுள்ளார்.
விடுதலைச் சிறுத்தைகளை பொறுத்தவரை தனித்துநின்று அவர்கள் பலத்தை காட்டியதில்லை. ஒவ்வொரு தேர்தலிலும் ஏதேனும் ஒரு கூட்டணியில்... பெரும்பாலும் திமுக கூட்டணியில் இருந்து வந்துள்ளது விசிக. இக்கட்சியை பொறுத்தவரை பட்டியலின மக்களே அதன் முதன்மை வாக்கு வங்கியாக உள்ளனர்.
தமிழக வாக்காளர்களில் பட்டியலினத்தவர்களின் பலம் 17 விழுக்காடு என்றும் பிற சமூகத்தினரை விட இது சற்றே அதிகம் என்றும் கூறுகிறது TCPD ஸ்பின்பெர் என்ற ஓர் ஆய்வு. இந்த வாக்குகளில் கணிசமானதை விசிக தன் வசம் வைத்துள்ளது.
தென் மாவட்டங்களில் புதிய தமிழகம் போன்ற கட்சிகளும் இவ்வாக்குகளில் குறிப்பிட்ட சதவீதத்தை வைத்துள்ளன. மேலும் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளும் பட்டியலின மக்களின் கணிசமான வாக்கு வங்கியை தம் வசம் வைத்துள்ளன. பட்டியலினங்களில் உள்ள உட்பிரிவுகளும் இந்த வாக்கு பிரிவினைக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
பட்டியலின வாக்குகள் இவ்வாறு பிரிந்து கிடப்பதும் விசிக தனித்து போட்டியிட தயக்கமாக இருக்கக் கூடும். விசிக தனித்தோ அல்லது அதிமுக கூட்டணியிலோ இணைந்து களம் காண்பது அதற்கு பாதகமாகவே அமையும் என்கிறார் அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி. அதிகாரப் பகிர்வு என்ற குரல், வரும் 2026 பேரவை தேர்தலில் புதிய திருப்பங்களை ஏற்படுத்துமா ? என்பதே தற்போதையக் கேள்வி...