செய்தியாளர் - பிருந்தா (திருச்சி)
திருச்செந்தூர் சுப்ரமணியன் சுவாமி கோயிலில் பராமரிக்கப்பட்டு வரும் தெய்வானை என்ற யானை தாக்கியதில் பாகன் உதயகுமார், அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் உயிரிழந்தனர். நேற்று நடந்த இந்த சம்பவமும் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
நேற்று நடந்தது என்ன?
தெய்வானை யானைக்கு உணவு கொடுக்கும் போது பாகன் உதயகுமார் மற்றும் அவரது உறவினர் சிசுபாலன் ஆகியோர் வந்துள்ளனர். அப்போது பாகனின் உறவினர், யானை அருகே நின்று நீண்ட நேரம் செல்ஃபி எடுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த யானை, சிசுபாலனை தும்பிக்கையால் தாக்கியது. அவரை காப்பாற்ற வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதாக திருச்செந்தூர் வனசரக அலுவலர் கவின் தெரிவித்துள்ளார்.
படுகாயங்களுடன் திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்து நடந்த இடத்தில் வனத்துறையினர் மற்றும் கால்நடை மருத்துவர்கள் ஆய்வு செய்து, யானையின் நிலையை பரிசோதனை செய்தனர்.
சம்பவத்தை தொடர்ந்து திருச்செந்தூர் கோயில் நடை அடைக்கப்பட்டு, பரிகாரப் பூஜைக்கு பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்காக நடை மீண்டும் திறக்கப்பட்டது.
யானை தெய்வானை மிகவும் அமைதியாகவே இருக்கும் நிலையில் இப்போதும் அவ்வாறே அமைதியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அசம்பாவித சம்பவத்துக்குப்பிறகு தற்போது வரை யானை உணவு எடுத்துக்கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், கோயிலுக்கு வரும் யானைகளை வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளை போல தொட முயற்சிப்பதும், அதனுடன் செல்பி எடுக்க முயற்சிப்பதும் மக்களின் வாடிக்கையாக மாறி வருகிறது.
யானைகளுடன் சுமூக உறவை ஏற்படுத்த வேண்டும் எனில், பொதுமக்கள் பாகங்களின் அனுமதியின்றி யானைகளை தொடவோ, செல்பி எடுக்கவோ கூடாது என்கிறார் திருச்சி மலைக்கோட்டை கோயில் யானை லட்சுமியின் பாகன் ரகுநாதன்.
அவர் கூறுகையில், “தேவையற்ற உணவுகளை யானைக்கு கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. திருக்கோயில் நிர்வாகம் அறிவுறுத்தல்கள் வழங்கி உள்ளார்கள். யானைகளிடம் போட்டோ எடுக்கக்கூடாது, கை அருகில் நிற்கவைக்க கூடாது என தெரிவித்துள்ளனர். மூன்று மாதத்திற்கு ஒரு முறை வனத்துறை மூலமாக யானைகளை பராமரிப்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறார்கள். மருத்துவர் மாதம் ஒருமுறை யானையை பரிசோதிப்பார்.
யானைகள் பாகங்களின் கட்டளையை ஏற்று நடக்க கூடியவை. அவற்றுக்கு ஆரோக்கியமான உணவு, நடைபயிற்சி உள்ளிட்டவை பாகன்களால் வழங்கப்படுகிறது. அவ்வாறு திருக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயிலில் உள்ள யானைகள் கால்நடை மருத்துவர்கள், வனத்துறையினர் உள்ளிட்டோரின் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு அதன் விதிகளின் அடிப்படையிலேயே பராமரிக்கப்படுகிறது.
ஆனால் தற்போதைய காலங்களில் யானையை பார்க்கும் மக்கள் அதன் மீது உள்ள ஆசை காரணமாக அதனைத் தொட முயற்சிக்கும் பொழுதும், அதனுடன் செல்பி எடுக்க முயலும் பொழுதும் நாங்கள் அதை தடுத்து நிறுத்துகிறோம். யானைகளை துன்புறுத்தினால்தான் அவை கோபமடையும், கூடுமானவரை பாகன்களின் அறிவுறுத்தல் படி யானையின் அருகில் செல்வது பொது மக்களுக்கும் யானைக்கும் இடையேயான பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தும்” என்கிறார் பாகன்.