காஷ்மீர் பிரச்னை குறித்து தமிழ்நாட்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மாநிலங்களவையில் 1984ஆம் ஆண்டு பேசியிருந்தார். அந்தப் பேச்சு தற்போது கவனத்திற்கு உரியதாக மாறி வருகிறது.
1984ஆம் ஆண்டு ஜூலை மாதம் 2ஆம் தேதி ஃபரூக் அப்துல்லாவின் ஆட்சி ஜம்மு-காஷ்மீரில் கலைக்கப்பட்டது. இதனையடுத்து ஜம்மு-காஷ்மீர் பகுதியில் பதட்டமான சூழல் நிலவியது. ஆகவே ஜம்மு-காஷ்மீரில் நிலவி வரும் சூழல் குறித்து மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் விவாதத்தில் அப்போது மாநிலங்களவை உறுப்பினராக இருந்த ஜெயலலிதா உரையாற்றினார்.
அதில், “மாநில அரசை மத்திய அரசு கலைக்கும் போது ஆளும் கட்சிக்கு அது பெரிய நெருக்கடியாக அமையும். இதேபோன்று தான் 1980ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் அதிமுகவின் ஆட்சி கலைக்கப்பட்ட போது சிரமம் ஏற்பட்டது. தற்போது அதே நிலை ஃப்ரூக் அப்துல்லாவின் கட்சிக்கும் நேர்ந்திருக்கும் என்று கருதுகிறேன்.
எனினும் நாட்டின் ஒருமைபாட்டிற்கு எதிராக செயல்கள் அதிகமாக நடைபெறும் போது அதன் மீது நடவடிக்கை எடுக்கதான் வேண்டும். ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சில மாதங்களாகவே விரும்பத்தகாத செயல்கள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக கடந்த ஆண்டு (1983ஆம்) சுதந்திர தினத்தன்று காஷ்மீரில் குண்டு வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. ஆனால் அதற்கு முந்தைய நாள் பாகிஸ்தானின் சுதந்திர தினத்தன்று அங்கு சில இடங்களில் கொண்டாட்டங்கள் நடைபெற்றன.
இதனைத் தொடர்ந்து 1983ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் போட்டியின் போது இந்திய வீரர்கள் மீது கல் வீச்சு நடைபெற்றது. அத்துடன் அங்கு ‘பாகிஸ்தான் சிந்தாபாத்’ என்ற முழக்கும் ஒலித்தது. மேலும் இந்த ஆண்டு(1984) பிரிவினைவாத தலைவர் மக்பூல் பட் துக்கிலிடப்பட்ட போது அவரை தியாகியாக காஷ்மீரில் சித்தரிக்கப்பட்டது. ஆகவே இது போன்று இந்தியாவின் ஒருமைப்பாட்டையும் இரயாண்மையும் சீர்குலைக்கும் வகையில் உள்ளது.
எனவே இதுபோன்று நேரங்களில் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இறுதியாக நான் மத்திய அரசிடம் இரண்டு கேள்விகள் கேட்க வேண்டும். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை ஆளுநர் ஆட்சியில் வைப்பதற்கு மத்திய அரசு பரிசீலிக்குமா? மேலும் ஜம்மு-காஷ்மீர் பகுதியை இந்தியாவுடன் முழுமையாக இணைப்பதற்கு ஏன் இவ்வளவு தாமதம் ஏற்பட்டு வருகிறது? அங்கு இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏன் முழுமையாக அமல்படுத்தப்படவில்லை?” என்ற கேள்விகளை ஜெயலலிதா எழுப்பி தனது உரையை முடித்து கொண்டார்.
இதன்மூலம் அவர் காஷ்மீரில் இந்திய அரசிலமைப்புச் சட்டம் முழுமையாக அமல்படுத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டையே எடுத்திருந்தார் என்று தெரியவருகிறது.