நாங்கள் ஆட்சிக்கு வந்தால் 7 பேரை விடுதலை செய்வோம் எனக்கூறி தற்போது மௌனமாக காட்சியளிப்பது ஏன் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரை புறநகர் மேற்கு மாவட்ட விவசாய பிரிவு சார்பில் கலந்தாய்வு கூட்டம் டி.குன்னத்தூரில் உள்ள ஜெயலலிதா கோவிலில் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசும்போது "காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்து அதன்மூலம் இதுதான் என் வாழ்நாள் சாதனை என்று ஜெயலலிதா கூறினார். அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடி பழனிசாமி விவசாய மக்களுக்காக பல்வேறு திட்டங்களை செய்தார். தொடர்ந்து ஐந்து ஆண்டு காலமாக வேளாண் துறைக்காக கிரிஷ் கர்மான் விருதினை தமிழகம் பெற்றது.
திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது கருத்து சுதந்திரத்திற்கு பாடம் எடுத்தனர். தற்போது ஆட்சிக்கு வந்தவுடன் அந்தப் பாடத்தை மறந்துவிட்டு கருத்து சுதந்திரத்தை நசுக்குகின்றனர். 7 பேர் விடுதலை குறித்து திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது இது அடிமை அரசு, உரிமை குரல் எழுப்ப முடியாது என்று பேசினர். மேலும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழுபேர் விடுதலை உறுதி என்று கூறினார்கள். ஆனால் தற்போது பரோலில் விட்டுவிட்டு 7 பேர் விடுதலையில் மௌனத்தை காட்சியாக திமுக அளிக்கிறது.
நீட் தேர்வு காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட போது ஜெயலலிதா சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்தார். நீட் தேர்வை அனைத்து மாநிலமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்க 7.5 இட ஒதுக்கீட்டினை எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்தார். இன்றைக்கு 435 ஏழை மாணவர்கள் மருத்துவப் படிப்பு படிக்கின்றனர்.
மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்துள்ளது. இன்றைக்கு திமுக அடக்குமுறையை ஏவி விட்டு தங்களின் இயலாமையை மறைக்க பார்க்கின்றார்கள். ஆட்சி அதிகாரம் நிரந்தரமல்ல. எதிர்க்கட்சி என்பது எங்களுக்குப் புதிதல்ல. இந்த அடக்குமுறையை எதிர்த்து போராடி நிச்சயம் நாங்கள் புனித அரசை உருவாக்கும் காலம் வரும்" என்று பேசினார்.