’கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம்’ - யாருக்கெல்லாம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும்; யாருக்கு கிடைக்காது?

மகளிருக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித் தொகை வழங்கும் திட்டத்திற்கு கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் என பெயரிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் ஸ்டாலின்
முதலமைச்சர் ஸ்டாலின்PT Desk
Published on

வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுடன் தலைமை செயலகத்தில் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் இதுபோன்ற மாபெரும் திட்டம் இதுவரை செயல்படுத்தப்படவில்லை என பெருமிதம் தெரிவித்தார்.

மேலும், ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பங்களை பெற வேண்டும் என்றும், ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பயனாளர்களுக்கு உதவித் தொகை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார். சிறப்பு முகாம்களை ஏற்படுத்தி கூட்ட நெரிசலை தடுக்க வேண்டும் எனவும், இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்நிலையில், ஆயிரம் ரூபாய் உரிமை தொகை பெறுவதற்கான நிபந்தனைகள் என்னென்ன என்று பார்க்கலாம்:

* 21 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்

* ஒரு குடும்ப அட்டைக்கு ஒருவருக்கு மட்டுமே

* உச்ச வயதுவரம்பு எதுவும் இல்லை

* இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி உண்டு.

* இல்லம் தேடி கல்வி திட்ட பணியாளர்களை பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு

* நியாய விலைக் கடை அட்டை எந்த கடையில் உள்ளதோ, அந்த கடையில் விண்ணப்பிக்க வேண்டும்

* பெண் அரசு ஊழியர்களுக்கு ஆயிரம் ரூபாய் மகளிர் உதவித் தொகை கிடைக்காது

* பெண் சட்ட மன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களான குடும்ப தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது

* ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய் மேல் வருமானம் பெறும் குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் கிடைக்காது.

* சொந்தமாக கார் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

* ஐந்து ஏக்கர் நிலம் வைத்திருக்கும் குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

* ஆண்டுக்கு 3 ஆயிரத்து 600 யூனிட்டுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்தும் குடும்பத்தில் உள்ள குடும்பத் தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கப்படாது.

மகளிர் உரிமைத் தொகைக்கு வரையரை
மகளிர் உரிமைத் தொகைக்கு வரையரை

அத்துடன், ஆயிரம் ரூபாய் மகளிர் உரிமை தொகையை பெற ஆன்லைனில் விண்ணப்பிக்கும் தேதி விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. ரேஷன் கார்டுகள் அடிப்படையில் குடும்பத் தலைவிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள் யார் யார்?:

பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்
பயன் பெறத்தகுதி இல்லாதவர்கள்

பயனாளர்களின் ஆதார் எண் கணக்கெடுக்கப்பட்டு ஒரே பயனாளி இரண்டு முறை பலன் அடையாத வகையில் பார்த்துக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பத் தலைவிகளின் வங்கி கணக்கில் ஆயிரம் ரூபாய் செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com